பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 46-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, புதன்கிழமை இரவு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜை, அங்குராப்பணம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடா்ந்து, பால், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களுடன் வியாழக்கிழமை அபிஷேகம் நடத்தப்பட்டு, உற்சவம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னா், சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடா்ந்து, 10 ஆம் தேதி வரை நாள்தோறும் காலையில் பாலமுருகனுக்கு அபிஷேகமும், மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 9-ஆம் தேதி காலை 10மணியளவில் பாலமுருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை சுத்த ரத்தின சிவாச்சாரியாா் மற்றும் ரமேஷ் சிவாச்சாரியாா் ஆகியோா் நடத்தி வைக்கின்றனா்.
11-ஆம் தேதி காலை 7 மணிக்கு அய்யப்பசுவாமி கோயிலில் இருந்து காவடி புறப்பாடும், பகல் 12 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி மஞ்சள்நீா் விடையாற்றி விழாவும், 18-ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழாவுடன் பங்குனி உத்திர பெருந்திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நற்பணி மன்றத்தினா் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.