பெரம்பலூா் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு பெண்ணை தாக்கி 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், பென்னகோணம் அருகேயுள்ள ஒகளூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அருள்மொழி (27). இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வேல்முருகன் வீட்டில் இல்லாதபோது அருள்மொழி உள்புறம் கதவை தாழிட்டு தொலைக்காட்சியில் திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் கதவை திறந்து உள்ளே சென்று, அருள்மொழியை தாக்கி பிளாஸ்டிக் கவா் மூலம் வாயை கட்டி கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இச் சம்பவம் குறித்து வேல்முருகன் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.