செய்திகள் :

'ஜெயலலிதாவுக்குப் பிடித்த பிடிவாதக்காரி; புலம்பிய சந்திரபாபு' - நானே கேள்வி நானே பதில்! | My vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஜூனியர் விகடனில் சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? கேள்வி பதில் பகுதியை ஆவலுடன் காத்துக் கிடந்து வாசித்த நான், பின்னாளில் ஆனந்த விகடனின் ஹாய் மதன் கேள்வி பதில் பகுதியை ஆர்வமுடன் படித்த நான் நாளடைவில் நானும் இரண்டு கேள்விகள் கேட்டு பதில் படித்த நான் கையடக்க விகடனாக இருந்து இரு கையளவு விகடனாக விரிந்த காலத்தில் வாசகர்களின் நானே கேள்வி நானே பதில்! என வெளியானதைப் படித்து மகிழ்ந்த எனக்கு, நானே கேள்வி நானே பதில் பக்கத்தில் நானும் இடம் பெறவில்லையே என்ற ஏக்கம் உண்டு.

இதோ இன்று மை விகடன் பக்கத்தில் நானே கேள்வி நானே பதில் பாணியில் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்கிறேன்.

நானே கேள்வி: மனைவி பேசவே கூடாது, தன் மனைவி அதிகம் பேசுவதாக மத்தியப் பிரதேசத்தில் ஒரு கணவர் விவாகரத்து  கேட்டு உள்ளார். இந்த செய்தியைக் கேட்டதும் நினைவுக்கு வரும் விஷயம் ஏதும் உண்டா? 

நானே பதில்: உண்டே! இந்த செய்தியைக் கேட்கும் போது எனக்கு ஜெயலலிதா அவர்கள் எழுதிய ஒரு தகவல்தான் நினைவுக்கு வருகிறது. பிரான்ஸ் தேசத்தில் சேவியர் என்கிற அரசு வழக்குரைஞர் இருந்தாராம். அவரது மனைவி பெயர் ரேனியர். "வாயை மூடு" என ரேனியரிடம் சேவியர் சொன்னாராம். இதனால் கோபமான ரேனியர், தனது வாழ்நாள் முழுக்க யாரிடமும் பேசாமல் வாழ்ந்துள்ளார். இவரைத்தான் தனக்குப் பிடித்த பிடிவாதக்காரியாக ஜெயலலிதா எழுதினாராம்.

நானே கேள்வி: பிரபலம் ஒருவரைக் கண்டால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் காலம் கடந்து இதோ இன்று பிரபலத்துடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளும் காலம் இது. தனக்குப் பிடித்த பிரபலம் இவர்தான் என்று தெரியாமல் அவரிடமே அவரைப் பற்றிப் பேசிய அனுபவம் உண்டா?

நானே பதில்: ஒரு நாள் நடிகர் சந்திரபாபு தினமணி அலுவலகம் வந்த போது தடுக்கி விழுந்தார். அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அப்போது அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன்). விருத்தாசலத்திடம் நடிகர் சந்திரபாபு, "நீலப்பந்து என்ற கதையை நீங்க படித்திருக்கிறீர்களா?, ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் ரெம்ப எக்ஸலென்டான டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்.  நீங்களும் படித்துப் பாருங்க, புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றாலே எனக்கு உயிர்" என்று சந்திரபாபு கூறியபோது ஏதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார் விருத்தாசலம் எனும் புதுமைப்பித்தன்.

ஞானி புதுமைபித்தன்

கொஞ்சம் நாள் கழிந்திட, தவறி விழுந்த தன்னை மருத்துவ மனையில் சேர்த்துக் கவனித்துக் கொண்ட விருத்தாசலம்தான், தான் விரும்பி படிக்கும் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் எனும் விஷயம் தெரிய வந்திட அலறிப் போன சந்திரபாபு, "அடடா... அவர்தானா புதுமைப்பித்தன், அவர் என்று தெரியாமல் அவரிடமே அவன்... இவன்.. என்று பேசிட்டேனே!" என்று புலம்பித் தீர்த்தாராம் சந்திரபாபு.

நானே கேள்வி: வாடகைக்கு ஆட்டோ பிடித்து செல்கிறோம் இடையே, சில நிமிட வேளை என்றால் ஆட்டோக்காரர் கட்டணத்துடன் WAITING CHARGE கேட்பது வழக்கம். இதோ இப்போது ஓலோ, ரெட்டாக்ஸி என டாக்ஸி மயமாகிப் போன நாளில் ஒரு நாள், கிலோமீட்டர் கணக்கினை விடக் கூடுதலாகக் கட்டணத்தை ஓட்டுநர் கேட்க, கூடுதல் கட்டணம் ஏன் என்று நான் கேட்க "ட்ராஃபிக் சிக்னலில் கடக்கும் வரை காத்திருந்த நிமிடங்களுக்கான WAITING CHARGE'' என்று கூறினார். இப்படியாகக் கறாரான WAITING CHARGE வசூல் ஏதும் உண்டா?

நானே பதில்: 138 ஆண்டுகளுக்கு முன்பு கறார் WAITING CHARGE வசூல் வரலாறு ஒன்று உள்ளது.1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார்.

லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீசுவரர், அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். கப்பல் (YATCH) ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர்.ஒருநாள், வாடகை குதிரை வண்டியைக் கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப் போ" என்று ஆணையிட்டார்.

கப்பல் துறையில் இறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுநரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டவர், ''எனது புதிய கப்பலை முதன் முறையாகப் பரிசீலிக்க, ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும்வரை இங்கேயே காத்திரு. நான் திரும்பியதும் நீதான் என்னை வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும்" என்றார்.

அந்த வாடகை வண்டி ஓட்டுநரின் பெயர் மார்டின் ஹால்லோவே. அவரும், லார்ட் டிராக்ஸ் கேட்டதற்கு, சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.

அன்று பிற்பகல், மாலை முழுவதும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள், அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்குக் குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் கழிந்து விட்டன. ஆனாலும் தொடர்ந்து மார்டின் காத்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கை முறையாகி விட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறைமுகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.

வேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை, அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்து முயலவுமில்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தையும் யாரிடமும் கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலைவரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.

இப்படியே 599 நாட்கள் உருண்டோடி விட்டன. கடைசியில் 1889-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது. லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துக்குத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார். மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால் கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான, ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்த காற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப்பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பிவிட்டேன்" என்றார்.

நிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப் பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.

''பிரபு அவர்களே, இதோ என்னுடைய பில். ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவரக் கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகை கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்."

"மொத்தத் தொகை எவ்வளவு?" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார் லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ் 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர்.

அத்தனை நாட்களாக அவருக்காகவே காத்திருந்து வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றுச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.

"ரைட்டோ!" என்றார் லார்ட் டிராக்ஸ். மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறை கூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனைப் பெரிய தொகையைச் செலுத்தி விட்டார். குதிரை வண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின்" என்று ஆணையிட்டார்.

லார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது. வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.

"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்" என்றார் மார்டின் கறாராக. மறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தைச் செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியதாம்.

என்ன கறாரான வசூல் வரலாறு படித்ததும் புன்முறுவல் உங்கள் முகத்தில் பூக்கிறதா !

நானே கேள்வி : ரமணா பட விஜயகாந்த் க்ளைமாக்ஸ் போல் நிஜமாகவே ஒரு கதாநாயகன் இருப்பாரா?!
 

நானே பதில் : இருப்பாரா இல்லை, இருந்திருக்கிறார் என்பதே உண்மை. மதநம்பிக்கையைக் கேலி செய்கிறார், இளைஞர்களுக்குத் தவறான வழிகாட்டுதல் செய்கிறார் என சாக்ரட்டீஸ் மீது வழக்குத் தொடுக்கப் பட்டபோது, "மக்களைச் சிந்திக்கத் தூண்டியது தவறு என்று நீங்கள் கூறுவதை ஏற்க மாட்டேன்" என வாதிட்ட சாக்ரட்டீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை என்று கூறினார்கள்.

கம்பீரமாக மறுத்தார் சாக்ரட்டீஸ். மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டுகளும், எதிராக 220 ஓட்டுக்களும் விழுந்தன. சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டார் சாக்ரடீஸ். ஹெம்லாக் மரத்தின் விஷம் குடித்துச் சாவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சிறையிலிருந்து தப்பித்துப் போகலாம் என்று நண்பர்கள் முயற்சி எடுத்த போது, சாக்ரடீஸ், "சமூகத்திற்கும் மனிதனுக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் இருக்கிறது. அந்தச் சட்ட அமைப்புக்குள் இருந்தே நான் போராட வேண்டுமே தவிர, இதை விட்டு ஓட மாட்டேன்" என்று அந்தக் காலத்திலேயே நிராகரித்துச் சிரித்துக் கொண்டே விஷத்தை வாங்கி குடித்து முடித்த சாக்ரட்டீஸ்...

"விஷத்தைக் குடித்து விட்டேன், கால்கள் மரத்துப் போகிறது, இதயம் படபடக்கிறது, மயக்கமாக வருகிறது, போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொள்கிறேன்" என தன் மரணத்தைக் குறிப்புகளாகப் பதிவு செய்த நிஜமான ரமணா சாக்ரட்டீஸ்.

நானே கேள்வி: இடைவிடாத தொடர்ச்சியான சிந்தனை கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

நானே பதில்: அட.... இடைவிடாத தொடர்ச்சியான சிந்தனை மற்றும் கேள்விகள் மூலம் ஒரு விஞ்ஞானியாகவே வாய்ப்பு உள்ளது.

உங்களில் யாரேனும் ஒருவர் ஒரு நாள் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்து இருக்கும் போது, மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று உங்கள் மீது விழுகிறது. என்ன செய்வீர்கள்? ஆப்பிளை எடுத்துக் கடித்தபடி நகர்வீர்களா? வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று எடுத்துச் செல்வீர்களா? இன்னும் இரண்டு ஆப்பிள்களை மரத்தில் பறிப்பீர்களா?

இல்லை ஐசக் நியூட்டனைப் போன்று இந்த ஆப்பிள் ஏன் மரத்திலிருந்து கீழே விழுந்தது? ஏன் அங்கே நிற்கவில்லை? ஏன் மேலே போகவில்லை? இப்படியாக இடைவிடாத தொடர்ச்சியான சிந்தனை கேள்விகளுக்கு விடையே புவியீர்ப்பு விசை எனும் உண்மை.‌ தொடர்ச்சியான சிந்தனை மற்றும் கேள்விகளுக்குத் தயாராகுங்கள்.‌ நீங்களும் விஞ்ஞானி வரிசையில் இடம் பெறலாம்! 

- வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel