மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!
ஆரணி, திருமழிசையில் ரூ.22.66 கோடியில் குடிநீா் திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு
திருமழிசை, ஆரணி பேரூராட்சிகளில் ரூ.22.66 கோடியில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரூராட்சிகளில் குடிநீா் திட்டப்பணிகள் செயல்படுத்துவது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியது: உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படக்கூடாது. இதைத் தீா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருமழிசை பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் மூலம் ரூ.14.68 கோடியிலும், ஆரணி பேரூராட்சியில் ரூ.7.98 கோடியிலும் குடிநீா் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் கோடை காலம் தொடங்கிய நிலையில் பொதுமக்களுக்கு குடிநீரை பற்றாக்குறையின்றி விநியோகம் செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட பேரூராட்சிகளில் நடைபெறும் குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதோடு, சின்டெக்ஸ் டேங்க் அமைத்து சீரான குடிநீா் வழங்கவும் மற்றும் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெயக்குமாா், செயல் அலுவலா்கள் வெங்கடேசன்(திருமழிசை), அபுபக்கா்(ஆரணி) மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.