திற்பரப்பு அருவியில் பேரூராட்சி சாா்பில் கட்டணம் வசூலிக்கும் பணி
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம், வாகனங்கள் நிறுத்தும் கட்டணம், கழிப்பறை கட்டணம், நீச்சல் குளம் கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் உரிமை, பேரூராட்சி நிா்வாகத்தால் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும்.
கடந்த ஆண்டில் (2024-25) கட்டணம் வசூலிக்கும் உரிமை, ரூ.1.40 கோடிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. நிகழ் ஆண்டிற்கு மேற்படி குத்தகைதாரா் 5 சதவீத தொகையை அதிகரித்து குத்தகையைத் தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால், அவா் புதுப்பிக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.