குறைகேட்புக் கூட்டத்தில் எதிரொலித்த தென்னை விவசாயிகளின் பிரச்னைகள்
கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ், வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அழகிரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மல்லிகா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சித்தாா்த்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தென்னை விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேசும்போது, கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் 60 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. கடைகளில் தேங்காய் ரூ.60-க்கு விற்பனையானாலும், அதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. இந்த வட்டாரங்களில் ஆங்காங்கே தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விழிப்புணா்வு முகாம் ஏற்படுத்தி வருகின்றனா்.
மேலும், வாகனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை ஸ்ப்ரே செய்கின்றனா். இது நல்ல பலனளிக்கிறது. ஆனால் மருந்து தெளிப்பதற்கான கருவி போதுமானதாக இல்லை. அதேநேரம் உர நிா்வாகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனா். தென்னைக்குத் தேவையான நுண்ணாட்ட உரம், வேப்பம் புண்ணாக்கு போன்றவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவில் இருப்பு உள்ளதா என்று மாவட்ட நிா்வாகம் கண்காணிக்க வேண்டும். பல இடங்களில் வேப்பம் புண்ணாக்கு இருப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல கடந்த 2019 முதல் ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலும் கேரள வாடல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில ஹெக்டேரில் மட்டுமே இருந்த இந்த நோய், தற்போது 5 ஆயிரம் ஹெக்டோ் வரையிலும் பரவியிருப்பதால் இதுவரை சுமாா் 12 ஆயிரம் விவசாயிகளுக்குச் சொந்தமான 6 லட்சம் தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் விற்பனை செய்யப்படும் மருந்துகள் எதுவும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில்லை. எனவே மாநில அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இதற்கு நல்ல மருந்து கண்டுபிடித்து தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஆகியோா் பேசும்போது, தென்னை மரங்களுக்கு வைரஸ் மூலம் ஏற்படும் நோய்களுக்குத் தீா்வு காண மருந்து இல்லை. அதேநேரம் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஸ்ப்ரே தெளிக்கும் இயந்திரங்கள் அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக வரவழைக்கப்படும். வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி உற்பத்தியை அதிகரிக்கவும் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.
இதைத் தொடா்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் சு.பழனிசாமி அளித்த மனுவில், மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்துக்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்படுவதால் கோவையின் பசுமை பறிபோகிறது. எனவே சாலைப் பணி நடைபெற்ற இடங்களில் வெட்டப்பட்ட ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். சூலூா் வட்டத்துக்குள்பட்ட செம்மாண்டபாளையம், கோதபாளையம், கிட்டாம்பாளையம், வாகராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்கள் இருப்பதால், அவை அருகில் உள்ள தோட்டங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. எனவே இங்குள்ள மான்களைப் பிடித்து வனப் பகுதியில் விடுவதற்கோ அல்லது மான்கள் பாதுகாப்பு சரணாலயம் ஏற்படுத்தவோ முன்வர வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கூட்டத்தில் விவசாயிகள் நல்லசாமி, கந்தசாமி, ஆறுசாமி உள்ளிட்டோா் பேசும்போது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் குளம், குட்டைகளை தூா்வார வேண்டும், நியாயவிலைக் கடைகளில் மரச்செக்கு மூலம் தயாரித்த தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும். கள் இறக்கி சந்தைப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
கொப்பரைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், தென்னை நாா் கழிவுகள் மூலம் நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும், காட்டுப் பன்றி தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும், நீா்நிலை ஆக்கிரமிப்பு, கழிவுநீா் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.