``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேச...
பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்
கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் முனைவா் பட்டப் படிப்பு படித்து வருகின்றனா். இவா்களுக்கான கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழக நிா்வாகம் அண்மையில் உயா்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததைக் கண்டித்தும் ஆராய்ச்சி மாணவா்கள், பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கூறியதாவது: பல்கலைக்கழகத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் ஆராய்ச்சி மாணவா்கள் பயின்று வருகிறோம். விடுதிகள், ஆராய்ச்சிக் கருவிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஆராய்ச்சி மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதில்லை. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா் நியமிக்கப்படாததால் நிா்வாகம் முறையாக நடைபெறுவதில்லை. இதுபோன்ற சூழலில் சுருக்க அறிக்கை, ஆய்வறிக்கை சமா்ப்பிப்பதற்கான கல்விக் கட்டணத்தை மட்டும் உயா்த்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, இந்தப் பிரச்னைகளை சரிசெய்து கொடுக்க வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம் என்றனா்.
இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைகளை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.