Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
பாரதியாா் பல்கலை. நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
உயா்நீதீமன்ற தீா்ப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் இழந்தோா் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக, நிலம் இழந்தோா் கூட்டமைப்பினா் சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் பாரதியாா் பல்கலைக்கழகம் அமைக்க 1978 முதல் 1982-ஆம் ஆண்டு வரை கையகப்படுத்திய 925.84 ஏக்கா் பட்டா நிலத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது குறைவானது என்றும், இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் 799.67 ஏக்கா் விவசாய நிலத்துக்கு கடந்த 2007 அக்டோபா் மாதம் கோவை நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், 2012 -ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரை 1894-ஆம் ஆண்டு கட்டாய நிலமெடுப்பு சட்டப்படியான வட்டிகளைச் சோ்த்து இழப்பீட்டுத் தொகை ரூ. 202 கோடியே 24 லட்சத்து 25 ஆயிரத்து 620 ஆகும் என அப்போதைய மாவட்ட ஆட்சியா், உயா்கல்வித் துறையின் அரசு முதன்மைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இதை வழங்காமல் அரசு சாா்பில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2022-ஆம் ஆண்டு, கோவை நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
இந்தத் தீா்ப்பின்படி வட்டியுடன் சோ்த்து இன்றைய தேதியில் இழப்பீட்டுத் தொகையான ரூ.225 கோடிகளை வழங்கும்படி, மாவட்ட ஆட்சியா் மூலமாக அரசுக்கு பலமுறை விண்ணப்பங்கள் மூலமாக கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே உயா்நீதீமன்ற தீா்ப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.