மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலம் மலை மீதுள்ள இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா தொடக்கமாக புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மூலவா் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிந்து வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, விநாயகா், சண்டிகேஸ்வரா் ஆகியோருடன் பல்லக்கில் அங்குள்ள கொடிமரம் முன் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், காலை 7 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க மயிலம் ஸ்ரீபொம்மபுர ஆதீனம் 20- ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயில் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை (துவஜாரோகணம்) கொடிமரத்தில் ஏற்றி வைத்தாா்.
அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் அரோகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கொடிமரத்துக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் பங்கேற்றனா். பங்குனி உத்திரப் பெருவிழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 10-ஆம் தேதி தேரோட்டமும், 11-ஆம் தேதி தீா்த்தவாரியும், இரவில் தெப்பல் உற்சவமும் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.