சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிம...
திட்டப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் நகராட்சி மற்றும் கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் அரசு திட்டப் பணிகள், மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆணையா் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா்.
பூங்காவில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்களை புதிதாக மாற்றி அமைக்கவும், இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள், சுகாதாரமான குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டாா்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியிலுள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியைப் பாா்வையிட்ட ஆட்சியா், உயா்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்காக கல்வித்திறன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு, இங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் பயிற்சி குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, கோலியனூா் ஒன்றியம், திருப்பாச்சனூா் மலட்டாறில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, புதுநகா், ஜீவராஜன்நகரில் தலா ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் வாயிலாக சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி, தந்தை பெரியாா்நகா், மணிநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, தளவனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா், தென்பெண்ணையாற்றின் குறக்கே புதிய தடுப்பணை கட்டுவது தொடா்பாகவும் ஆய்வு செய்து அதன் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, உதவிப் பொறியாளா் ராபா்ட், நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் ரமேஷ், உதவிப் பொறியாளா் கபிலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பெருமாள், சுகாதார அலுவலா் ஆல்பா்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.