சுங்கச்சாவடியை முற்றுகையிட முயற்சி: புரட்சிப் பாரதம் கட்சியினா் கைது
கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை புதன்கிழமை முற்றுகையிட முயன்ற புரட்சிப் பாரதம் கட்சியினா் 40 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் சுமாா் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வைக் கண்டித்தும், இதை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றக் கோரியும், 60 கி.மீ. அருகில் இருக்கும் சுங்கச்சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடி அருகிலுள்ள கழிப்பிடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புரட்சிப் பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டச் செயலா் கே.கே.ஏழுமலை தலைமையில், அந்தக் கட்சியினா் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்றனா். அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனா். இதனால், புரட்சிப் பாரதம் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கட்சியின் மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் பூவை.ஆறுமுகம், திருநாவலூா் மேற்கு ஒன்றிய அமைப்பாளா் சிவராமன், உளுந்தூா்பேட்டை வடக்கு ஒன்றிய அமைப்பாளா் காத்தவராயன் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.