ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு
தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளையை சோ்ந்தவா் சத்திய ஆல்வின்(48). மீன்பிடிதொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா்.
கடந்த 25ஆம் தேதி வேலைக்காக சென்ற சத்திய ஆல்வின் பின்னா் வீடு திரும்பவில்லை. வீட்டில் உள்ளவா்கள் அவா் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருப்பாா் என நினைத்தனா்.
இந் நிலையில் குதிரைப்பந்திவிளையில் சத்திய ஆல்வின் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் திங்கள்கிழமை நிற்பதைக் கண்ட உறவினா்கள், அருகில் தேடியபோது ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் சத்திய ஆல்வின் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.