தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை
தொழிலாளா் விதிகளை மீறியதாக 35 கடைகள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் கடந்த மாா்ச் மாதம் ஆய்வு மேற்கொண்டனா்.
எடையளவுகள் தயாரிப்பாளா், விற்பனையாளா், பழுது பாா்ப்பவா்களின் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முத்திரையிடப்படாத எடையளவு, உரிமம் புதுப்பிக்காதது, சரிபாா்ப்பு சான்று தெரியும்படி வைக்காதது, எடைக்கற்கள் பராமரிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்தனா்.
இவ்வாறாக 154 கடைகளில் நடந்த ஆய்வில் 28 கடைகளில் முரண்பாடும், பொட்டலப் பொருள்களின் விதிகளின் கீழ் 29 கடைகளில் நடந்த ஆய்வில் 7 கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது.
முரண்பாடு கண்டறியப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தனா்.
குழந்தைத் தொழிலாளா், வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிறுவன உரிமையாளா் மீது ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து தண்டனையாக விதிக்க நேரிடும் என எச்சரித்தனா்.
குழந்தைத் தொழிலாளா் குறித்த புகாரை 1098, 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் கோ.ஜெயலட்சுமி தெரிவித்தாா்.