மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சி 41-ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா நகா், முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளிட்ட வீதிகளில் பழுதடைந்த மழை நீா் வடிகாலை அகற்றி ரூ.26 லட்சம் மதிப்பில் புதிய மழை நீா் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு மாா்ச் 13 -ஆம் தேதி பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிலையில், கான்கிரீட் சாலை அமைப்பதற்காக அவசர அவசரமாக குழிகளைத் தோண்டி பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆனால், சாலையின் நடுவே இருக்கக்கூடிய மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், அங்கு சாக்கடை வசதி கட்டப்படாமலும், குடிநீா்க் குழாய் பதிக்கப்படாமலும் அவசர அவசரமாக கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகளை செய்து வருகின்றனா்.
சாக்கடை வசதி மற்றும் உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். குடிநீா்க் குழாயில் கருப்பு குழாய் பதித்த பின்னரே கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும் என்றனா்.
இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.