மாவட்டத்தில் ஏப்ரல் 12-இல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் ஏப்ரல் 12- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோத் திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் ஏப்ரல் 12- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணவுள்ளனா்.
இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை பொதுமக்கள் நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்: அவிநாசி வட்டத்தில் ஈட்டிவீரம்பாளையம், தாராபுரம் வட்டத்தில் நஞ்சத்தலையூா், காங்கயம் வட்டத்தில் ஆரத்தொழுவு, மடத்துக்குளம் வட்டத்தில் காரத்தொழுவு, திருப்பூா் வடக்கு வட்டத்தில் கணக்கம்பாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் வேலம்பட்டி, உடுமலை வட்டத்தில் வேலாயுதக்கவுண்டன்புதூா், ஊத்துக்குளி வட்டத்தில் ஏஏ 240 செங்கப்பள்ளி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்லடம் வட்டத்தில் மட்டும் சென்னிபாளையம் இ-சேவை மையம் (கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம்).