மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது.
மாா்ச் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் 20-ஆம் தேதி காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் மேட்டுப்பாளையம் வட்டத்திலேயே தங்கிருப்பாா். மாவட்ட முதல்நிலை, துறையின் தலைமை அலுவலா்களும் தங்கியிருந்து கள ஆய்வு செய்து மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்வாா்கள்.
இதற்காக வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்கள் மக்களிடம் மனுக்கள் பெறுவாா்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையிலும் ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.