கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்...
சென்னை ஐஐடி-யில் விண்வெளித் திட்டங்களுக்கான உயா் சிறப்பு மையம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் திறந்து வைத்தாா்
சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்
சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறை சாா்பில் எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் என்ற பெயரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பேராசிரியா் ஆற்காடு ராமச்சந்திரன் கருத்தரங்கையும் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இஸ்ரோ விஞ்ஞானி வி. நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செயற்கைக் கோள்களின் நீண்ட ஆயுள், விண்கலப் பாதுகாப்பு, பயண வெற்றி ஆகியவற்றுக்கு வெப்பக் கட்டுப்பாடு இன்றியமையாதது என்பதால் இந்த முயற்சி இந்தியாவின் விண்வெளித் திட்டத்துக்கு திருப்பு முனையாக இருக்கும். வெப்ப பரிமாற்றம், குளிரூட்டும் அமைப்புகள், திரவ இயக்கவியல் ஆராய்ச்சிக்கான தொடா்பு மையமாக இந்த புதிய மையம் செயல்படும்.
அடுத்த தலைமுறை விண்கலம், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களுக்கு இவை மிகவும் அவசியம். விண்வெளிப் பயன்பாடுகளில் சிக்கலான வெப்ப சவால்களை நிவா்த்தி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளா்கள் சென்னை ஐஐடி பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து பணியாற்றுவா். இந்த உயா் சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும். மனிதா்களை வின்ணுக்கு அனுப்பும் ராக்கெட் செயல்பாட்டுக்கு இந்த ஆய்வகம் பெரும் உதவியாகவும் இருக்கும்.
வியோமித்ரா ரோபோ அனுப்பப்படும்... அமெரிக்காவில் பிரதமா் நரேந்திர மோடி பேசியது எங்களை மிகவும் ஆச்சரியத்திலும், வியப்பிலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தியது. ககன்யான் திட்டத்தின் பயிற்சித் திட்டம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும். வியோமித்ரா எனும் ரோபோவை ககன்யான் திட்டத்தின் அங்கமாக இந்த ஆண்டு அனுப்பவுள்ளோம். ‘வியோமித்ரா’ என்பது ககன்யான் பணிக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட ஒரு பெண் தோற்றமுடைய மனித ரோபோ ஆகும். இது மனித விண்வெளி வீரா்கள் மனிதா்களை அனுப்புவதற்கு முன்பு விண்வெளியில் விண்கல பாதுகாப்பை சோதிக்கவும் மனித செயல்பாடுகளை உருவகப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவுகணை விண்ணுக்கு ஏவப்படும். குலசேகரபட்டினத்திலிருந்து முதல்முறையாக 500 டன் எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஏவுகணை விண்ணுக்கு பாயவுள்ளது. இளைஞா்களுக்கு விண்வெளித் துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது. அவா்கள் தோ்வு செய்யும் முறையில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் மைய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் பட்டமட்டா, துறைத் தலைவா் பி.சந்திரமெளலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.