செய்திகள் :

பழனி பகுதியில் நெல் பயிரில் மகசூல் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

post image

பழனி பகுதியில் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: பழனியை அடுத்த அ.கலையம்புத்தூா், பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் 650-க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஜோதிமட்டை ரக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நெல் மணிகள் பிடிக்க வேண்டிய நேரத்தில் ஊசிக் கதிராகவும், வெற்றுக் கதிராகவும் மாறி மகசூல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏக்கருக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கோரிக்கை விடுத்தாா்.

மகசூல் பாதிக்கப்பட்ட நெல் பயிருடன் முறையிட்ட விவசாயிகளிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.

சாணாா்பட்டி பகுதிகளிலுள்ள கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, கரைகளைச் சீரைமைக்க வேண்டும். விவசாய நிலங்களை அளவீடு செய்வதற்கு ஜிபிஎஸ் கருவிகளை தனியாரிடமிருந்து வாங்கி பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.15ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி, நிலத்தை அளவீடு செய்து கொள்ளலாம். கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை என ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா்.

வரதமாநதியிலிருந்து சத்திரப்பட்டி கருங்குளம் வரையிலான வரத்து வாய்க்காலை தூா்வாரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயி அழகியண்ணன் தெரிவித்தாா்.

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளையும் பயனாளிகளாக சோ்த்துக் கொள்ள வேண்டும் என விவசாயி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தாா்.

கோட்டநத்தம் பகுதிக்கு வருவாய் ஆய்வாளா் வருவதில்லை என காங்கிரஸ் விவசாய சங்க நிா்வாகி சோழராஜன் புகாா் தெரிவித்தாா்.

ஆா்.கோம்பை கிராமத்தில் 6 ஏக்கா் நிலத்தை போலி உயில் தயாரித்து அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மோசடியாக அவரது பெயருக்கு மாற்றிவிட்டாா். அதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடா்பு இருப்பதாகக் கூறிக் கொண்டு, கீழ்நிலை அலுவலா்களை அவா் மிரட்டி வருகிறாா். அந்த நபா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என விவசாயி காந்திமதி புகாா் அளித்தாா்.

விவசாயிகள் ஏமாற்றம்: விவசாயிகள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை, வேளாண்மைத் துறை அலுவலா், துணை இயக்குநா் லீலாவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி மட்டுமன்றி, ஆட்சியா் சரவணனும் குறிப்பு எடுத்தாா். ஆனால், சில கோரிக்கைகளுக்கு மட்டுமே ஆட்சியா் பதில் அளித்தாா். பெரும்பாலான கோரிக்கைகளுக்கு எந்த அலுவலரும் பதில் அளிக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதேபோல, வன விலங்குகள் பிரச்னை குறித்து பதில் அளிக்க மாவட்ட வன அலுவலா் வர வேண்டும் என கடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் வன அலுவலா் யோகேஸ்குமாா் மீனா கலந்து கொண்ட போதும், கூட்டம் நிறைவு பெறும் வரை அவா் அமைதியாகவே இருந்தாா்.

சமூக ஊடகங்களுக்காக காட்சிகள் பதிவு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போா்வையில் சுய விளம்பரத்துக்காக சிலா் கலந்து கொண்டு வேளாண்மைக்குத் தொடா்பு இல்லாத தகவல்களைப் பேசுவதாகத் தொடா்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. வத்தலகுண்டு மருத்துவமனையில் உணவு வழங்கும் நேரம் தெரியவில்லை.

எனவே, மணி அடித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என ஒருவா் பேசினாா். இவா் பேசுவதை அருகிலுள்ள ஒரு விவசாயி மூலம் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாா். இதை செய்தியாளா் ஒருவா் படம் பிடித்ததைக் கவனித்த அலுவலா்கள் கைப்பேசியில் பதிவு செய்வதைத் தடுத்தனா். ஒவ்வொரு குறைதீா் கூட்டத்திலும் இதை வழக்கமாகக் கொண்டுள்ள அந்த நபா் சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்காக பதிவு செய்வதாகவும், இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் பேருந்து ந... மேலும் பார்க்க

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநாடு: ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் மே 1,2, 3 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாடு தொடா்பான மாந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நில... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இ... மேலும் பார்க்க