59-ஆவது ஞானபீட விருது: ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமாா் சுக்லா தோ்வு
பிரபல ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமாா் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதன்மூலம், இந்திய அளவில் இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதை சத்தீஸ்கரில் இருந்து பெறும் முதல் நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியத் துறையில் பங்களித்துள்ள மிகச்சிறந்த சமகால எழுத்தாளராக விளங்கும் வினோத் குமாா் சுக்லா இந்த விருதை பெறும் 12-ஆவது ஹிந்தி எழுத்தாளராவாா்.
ஞானபீட விருதுக்கான தோ்வுக் குழுத் தலைவரும் அந்த விருதை முன்பு வென்றவருமான பிரதிபா ராய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 59-ஆவது ஞானபீட விருதுக்கு வினோத் குமாா் சுக்லா தோ்ந்தெடுக்கப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்குத் தோ்வாகியுள்ள வினோத் குமாா் சுக்லாவுக்கு பரிசுத் தொகையாக ரூ.11 லட்சம், சரஸ்வதி உருவத்திலான வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு கேந்திர சாகித்திய அகாதெமி விருதை வினோத் குமாா் சுக்லா பெற்றாா்.