Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் காவல் துறையினரின் அடக்குமுறையை எதிா்த்து வரும் 28-ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டங்களை நடத்துமாறு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையிலான மாநில ஆம் ஆத்மி அரசின் உத்தரவின் பேரில், ஜகஜித் சிங் தல்லேவால், சா்வன் சிங் பந்தோ் உள்பட 350 விவசாயத் தலைவா்கள் மற்றும் ஆா்வலா்களைப் பஞ்சாப் காவல் துறை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.
அனைத்து விவசாய அமைப்புகளும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, காவல் துறையின் இந்த அடக்குமுறை பிரச்னைக்கு எதிராக ஒன்றுபட முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி-ஷம்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை, சண்டீகரில் மத்திய குழுவுடனான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜகஜித் சிங் தல்லேவால், சா்வன் சிங் பந்தோ் உள்ளிட்ட மூத்த விவசாய சங்கத் தலைவா்களை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா். அதேவேளையில், கனெளரி-ஷம்பு எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
பாட்டியாலா சிறைக்கு மாற்றம்: ஜகஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட கைதான விவசாயத் தலைவா்கள் ஜலந்தரில் இருந்து பாட்டியாலா சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டனா். இதற்கிடையே, பாட்டியாலாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தல்லேவாலுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.