பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!
பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் சிங் என்பவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த லோக்நாத் சிங்கிற்கு அவரது மனைவி உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமான நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தொண்டைப் பகுதியில் அறுத்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் தாயாரும் இதற்கு உதவி புரிந்துள்ளார்.
தன் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியாரை கைது செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது மனைவி கூறியபடி, மோசடி வழக்கு தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவின் கண்காணிப்பில் லோக்நாத் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
பெண் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்தபோது,
லோக்நாத் மற்றொரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். வயது வித்தியாசம் அதிகமிருந்ததால் லோக்நாத்தின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் லோக்நாத்துக்கும் தாங்கள் பார்த்த பெண்ணுக்கும்(லோக்நாத்தின் மனைவி) குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் முடிந்ததுமே மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார் லோக்நாத். இதன்பின்னரே அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு லோக்நாத் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன. இதுபற்றி கேட்கும்போது லோக்நாத், தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக லோக்நாத்தின் மனைவி அவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
எனினும் கணவனை மனைவி மற்றும் அவரின் தாயார் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.