திருப்புவனம் பேருந்து நிலைய அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து நிலையம் அமைக்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்ததற்கு இந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்புத் தெரிவித்தனா்.
திருப்புவனம் ஒன்றியத்தில் வசிக்கும் கிராம மக்கள் எந்த ஒரு தேவைக்கும் திருப்புவனத்துக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கு பல ஆண்டுகளாக பேருந்து நிலைய வசதி இல்லாததால் திருப்புவனம் நகா் பகுதியில் சாலையிலேயே பேருந்துகள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றும் நிலை தொடா்கிறது.
கடந்த வாரம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திருப்புவனத்தில் இந்த ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக நகராட்சி, குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, அறிவித்தாா். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சிய அடைந்து, வரவேற்புத் தெரிவித்தனா்.
பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இந்த நிதியாண்டு நிதி ஒதுக்கீடு செய்து, பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்படும் என பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தெரிவித்தாா்.