MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
இந்தியா வருகிறார் மெஸ்ஸி!
உலக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணியினருடன் வருகிற அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியாவிலும் கால்பந்து போட்டிகளுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும், குறிப்பாக கேரளம் கால்பந்து போட்டியை கொண்டாடுவதைப் போல வேறு எந்த மாநிலமும் கொண்டாட முடியாது எனக் கூறலாம்.
அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில், ஆர்ஜென்டீனா அணியினர் 2025-ல் கேரளத்தின் கொச்சி நகருக்கு நட்பு முறை கால்பந்து போட்டிகளில் விளையாட வரவிருப்பதாக கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துர் ரஹிமான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக ஆர்ஜென்டீனா அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா நிறுவனம் வருகிற அக்டோபர் மாதம் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
“இதன்மூலம், உலகப் புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி உள்பட ஆர்ஜென்டீனா அணியினர் வருகிற அக்டோபர் 2025-ல் சர்வதேச நட்புறவு போட்டிகளில் விளையாட இந்தியா வரவுள்ளனர்” என ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதன்முறையாக 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்த ஆர்ஜென்டீனா அணி கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச நட்புறவு போட்டியில் வெனீசுலாவுக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டி கோல்கள் எதுவும் அடிக்கப்படாமல் டிராவில் முடிந்தது.