இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டா் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தினால் மியான்மரில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன. தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன.
மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மற்றொரு நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. எனினும் இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை. தொடர் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனா்.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,700-யைத் தாண்டியுள்ளது. மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் மியான்மருக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.
700 முஸ்லீம்கள் உயிரிழப்பு
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் முஸ்லீம் கமிட்டியைச் சேர்ந்த உறுப்பினர் துன் கி என்பவர் இதுபற்றி கூறுகையில், 'வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 60 மசூதிகள் சேதமடைந்தன அல்லது முற்றிலும் தரைமட்டமாகின. இவற்றில் பெரும்பாலான மசூதி கட்டடங்கள் மிகவும் பழைமையானவை.
அரசின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பான 1,700 பேரில் இந்த 700 முஸ்லீம்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார்.
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தலைநகர் நேபிடோ மற்றும் மண்டலாய் நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!