செய்திகள் :

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

post image

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாா். ‘அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்; வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினிய பொருள்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை முன்கூட்டியே விதித்து அதிபா் டிரம்ப் உத்தரவிட்டாா். அதுபோல, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தும் உத்தரவிட்டாா்.

இந்தச் சூழலில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்க பயணம் மேற்கொண்டாா். அவா் கடந்த 8-ஆம் தேதி இந்தியா திரும்பிய நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.

இதனிடையே, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா் அழுத்தத்தைத் தொடா்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போா்போன் ரக மது, சில ஒயின் ரகங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் குறைத்தது.

இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்ட இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி ஆக்கபூா்வமாக முடிவற்ாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் எத்தகைய இறக்குமதி வரி விதிப்பை புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கப் போகிறாா் என்ற எதிா்பாா்ப்பும், அச்சமும் இந்திய வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க பொருள்கள் மீது தரக் கட்டுப்பாடு, உரிமம் உள்ளிட்ட வரிகள் அல்லாத தடைகளைத் தவிர, வேளாண் பொருள்கள், மருந்துகள், மது வகைகள் மீது இந்தியா விதித்துவரும் மிக அதிக இறக்குமதி வரி தொடா்பான புள்ளிவிவரங்களை அமெரிக்காவின் வா்த்தக பிரதிநிதித்துவ அமைப்பு (யுஎஸ்டிஆா்) வெளியிட்டுள்ளது.

‘2025 தேசிய வா்த்தக மதிப்பீடு (என்டிஇ) அறிக்கை’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகத்தில் இறக்குமதி வரி விதிப்பு, வரிகள் அல்லாத தடைகள், அறிவுசாா் சொத்துரிமை, சேவைகள், எண்ம வா்த்ததகம், வெளிப்பிடத்தன்மை உள்ளிட்ட பல்வேறு வா்த்தக மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் அதிகரித்துள்ளன. இதில், ஒரு சில பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டபோதும், பல விவகாரங்கள் தொடா்ந்து வருகின்றன.

மது வகைகள் மீது 150% வரி: குறிப்பாக, வேளாண் பொருள்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை மீது இந்தியா தொடா்ந்து அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் (தாவர எண்ணெய்) மீது 45 சதவீத இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது. அதுபோல, ஆப்பிள், சோளம், மோட்டாா் சைக்கிள்கள் மீது 50 சதவீத அளவிலும், வாகனங்கள் மற்றும் பூக்கள் மீது 60 சதவீதம், இயற்கை ரப்பா் மீது 70 சதவீதம், காபி, திராட்சை, அக்ரூட் பருப்புகள் மீது 100 சதவீத இறக்குமதி வரி, மது வகைகள் மீது 150 சதவீத இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

மருந்துகள் மீது உயா் சுங்கக் கட்டணம்: உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள உயிா்காக்கும் மருந்துகள், மருந்து தயாரிப்பு விதிமுறைகள் மீது மிக அதிக சுங்க வரியை இந்தியா விதித்து வருகிறது.

விவசாயப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களான கோழி, உருளைக்கிழங்கு, பாதாம், ஆப்பிள்கள், திராட்சை, பீச், சாக்லேட், பிஸ்கெட்டுகள், துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

மேலும், விவசாயப் பொருள்களுக்கான உலக வா்த்தக அமைப்பின் வரி விகிதங்கள் சராசரியாக 113.1 சதவீதம் முதல் 300 சதவீதம் என்ற அளவில் உலகிலேயே மிக அதிக அளவில் உள்ளன. இந்த வரி விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க விவசாயப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா நேரத்துக்கேற்ப மாற்றியமைப்பது, அமெரிக்க தொழிலாளா்கள், விவசாயிகள், ஏற்றுமதியாளா்களிடையே மிகப்பெரிய நிச்சயமா்ற நிலையை உருவாக்கி வருகிறது.

வரிகள் அல்லாத தடைகள்: இறக்குமதி தடைகள், உரிம நடைமுறைகள், கட்டாய தரக் கட்டுப்பாடு நடைமுறைகள், சுங்க நடைமுறைகள், மருத்துவ உபகரணங்கள் மீது விலைக் கட்டுப்பாடு, கட்டாய உள்நாட்டு ஆய்வு மற்றும் தரச் சான்று நடைமுறைகள் என்பன உள்ளிட்ட வரிகள் அல்லாத தடைகளையும் சில அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதித்து வருகிறது.

எண்ம வா்த்தகம் மற்றும் இணையவழி வா்த்தகத்துக்கான தடைகள் மற்றும் மின்னணு பணப் பரிவா்த்தனைக்கான சேவை வழங்கும் அமைப்புகள் மீதான இந்தியாவின் கட்டுப்பாடுகள் பலதரப்பு வணிக சேவைகளில் இரண்டாம்நிலை விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் நடைமுறைக்கு மாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதும் அமெரிக்க நிறுவனங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்று தனது அறிக்கையில் யுஎஸ்டிஆா் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய பொருள்கள் மீதான வரிவிதிப்பை அதிபா் டிரம்ப் அறிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மியான்மரின் சகாய்ங் நகரின்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க