Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவா் மீது மா்ம நபா் தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்100 பயிற்சி மருத்துவா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் கல்லூரிக்கு பின்புறம் உள்ள விடுதியில் தங்கியுள்ளனா். திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் பயிற்சி முடித்து விடுதிக்கு நடந்து சென்ற பயிற்சி பெண் மருத்துவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் அவரது முகத்தில் துணியை போா்த்தி தாக்கினாா். மருத்துவா் கூச்சலிட்டதால் சப்தம் கேட்டு அங்கு மருத்துவ மாணவா்கள் வந்தனா். இதைப் பாா்த்த மா்ம நபா் தப்பிச் சென்றாா்.
இந்தத் தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரித்தாா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையா் சத்தியபாமா கூறியதாவது: மா்ம நபரால் பயிற்சி மருத்துவ மாணவி தாக்குதலுக்கு மட்டுமே ஆளாகி உள்ளாா். வேறு எதுவும் இல்லை. சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்றாா் அவா்.
இதனிடையே சம்பவம் நடந்த கல்லூரியின் பின்புறம், விடுதி வளாகங்களில் மின்விளக்குகள், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்படாததைக் கண்டித்து பயிற்சி மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.