பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
TVK : `என்ன அப்பா இவர்? ; திமுக பாயாசம் அல்ல நாசிசம்’ - திமுக, அண்ணாமலையை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதல் பொதுக்குழு கூட்டத்தை திருவான்மியூரில் நடத்திவருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் N.ஆனந்த், துணை செயலாளர் CT நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதாவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இனி `வெற்றி தலைவர்’
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, ``இன்று வரை மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த தளபதி என்பதை விட்டுவிட்டு இனி `வெற்றி தலைவர்’ என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும் என இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றுகிறோம். இந்த அவையின் பெயர் ராமச்சந்திரா. 1972-ல் எந்த ஊழலை, எந்த தீய சக்தியை எதிர்த்து, குடும்ப அரசியலை எதிர்த்தாரோ அதே ராமச்சந்திரன் பெயரில் இருக்கும் அரங்கில் நமது பொதுக்குழு உதயமாகி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 2,75,000 பொறுப்பாளர்களை தலைவருடைய மேற்பார்வையில் நியமித்து, 50,000 பூத் கமிட்டிகளின் தகவல்களை ஆய்வு செய்து முடித்து, கட்சியினுடைய உட்கட்டமைப்பில் மிக அபரிமிதமாக பங்களிப்பு செய்து வருகிறார் தலைவர். அதை தொடர்ந்துதான் நாம் தேர்தல் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
இது ஹோம் ஒர்க்அவுட் அல்ல உங்களின் 70 ஆண்டு கால அரசியலுக்கு ரிட்டயர்மென்ட் கொடுப்பதற்காக வொர்க்அவுட். 40 வருட அரசியலில், யாரிடம் பணம், செல்வாக்கு, சாதி மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அமைச்சர்ளை தேர்வு செய்தீர்கள்.

அந்த ஆட்சியை தூக்கி எறிய கூடிய கட்சி உட்கட்டமைப்பை அமைதியாக பொறுமையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மாநில அரசின் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்பாடுகளை எதிர்க்கும் போராட்டமும், ஒன்றிய அரசின் தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளாக இருந்தாலும் ஒரு கருத்தை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்னைக்கும் குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் இது.
நமது தலைவர் உருவாக்கிய கருத்துவாக்கம் 'ஒரே அரசியல் எதிரி ஊழல், குடும்ப ஆட்சி தி.மு.க. நமது கொள்கை எதிரி பா.ஜ.க" என்பதுதான். நமது ஓராண்டு நிறைவு கூட்டத்துக்கு பிரசாந்த் கிஷோர் வந்ததற்கான காரணம், பெண்களுடைய இளைஞர்களுடைய செல்வாக்கால் தலைவர் விஜய் முதல்வராவதற்கான அனைத்து வாய்ப்பு இருக்கிறது என்பதுதான். அப்போது இந்தி மாநிலத்திலிருந்து பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்திருக்கிறார்கள் என விமர்சித்தார்கள்.

ஆனால் இப்போது தி.மு.க தனது மருமகனை வைத்து நடத்திக் கொண்டிருக்ககூடிய நிறுவனம், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரிஷி, மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு எதிராக வேலை செய்த ராபின் ஷர்மா, சுனில் என அரசியல் வியூகர்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். 70 வருடமாக அரசியலில் ஈடுபடுபவர்கள் மூன்று ஸ்டேடர்ஜி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
தி.மு.க அண்ணாமலையை வைத்து
அதே நேரம், தி.மு.க-வுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை எப்படி எல்லாம் உடைப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்குவது... எப்படி தமிழக வெற்றி கழகக் குரலை உடைப்பது, பல பொய் பிரச்சாரங்களை எப்படி உருவாக்குவது என்ற அஜெண்டாவோடு செட் செய்யப்பட்டிருக்கிறார் அண்ணாமலை. டெல்லியில் மோடி மற்ற மாநிலங்களுக்கு இதைச் செய்து கொண்டிருக்கிறார் என்றால், தமிழ்நாட்டில் தி.மு.க அண்ணாமலையை வைத்து நமக்கு எதிரான களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

புலி அமைதியாக இருக்கும் பொழுது ஆடு சம்பந்தமே இல்லாமல் தலை கொடுப்பது போல, எங்களுடைய குறிக்கோள் ஒட்டுமொத்தமாக தி.மு.க-வை அதன் ஊழலை எதிர்த்து இருக்கும்போது, சம்பந்தமே இல்லாமல் எனது தலைவரை பெண்களுடன் இணைத்து கேவலமாக பேசியிருக்கிறார். மக்களெல்லாம் எங்கே அந்த சார் என குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர் சட்டையை கழட்டிக்கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் மீது உங்களால் எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது.
நாங்கள் எங்கும் ஊழல் செய்யவில்லை, அந்தப் பணத்தை லண்டனில் சேர்த்து வைக்கவுமில்லை. என் தலைவர் வருஷத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு வருகிறார். ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்து ரெட் ஜெயண்ட் கம்பெனி வைத்து சினிமாவில் சம்பாதிக்கிறீர்கள்.
ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ரெட் ஜெயண்ட் வருமானம் என்ன... அரசியல் அதிகாரத்தை வைத்து சம்பாதிக்கக்கூடிய எந்த செயலும் ஊழல்தான். நியாயமாக வேலை செய்து சம்பாதிக்க கூடிய ஒரு ப்ரொபஷனல் சினிமா. அதை இவ்வளவு கேவலமாக இழிவு செய்கிறார்கள்.

1949-ல் அண்ணா உருவாக்கிய கட்சி கட்டமைப்பில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். இளைஞர்கள் கூட்டம் 2026-ல் புதிய முடிவெடுக்கும். ஐடி விங்க் எப்படி இருக்கும் என பொதுச்செயலாளிடம் கேட்டிருக்கிறேன். ஆனால், அண்ணாமலை பேசியதற்கு பின்னால் உலகம் முழுவதும் எங்களுக்கான ஐடி விங்க செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
அண்ணாமலை உங்கள் தலைவர் மோடிக்கும் உங்கள் கட்சிக்கும் உண்மையாக இருங்கள். அவர் உண்மையாக இல்லை என்பதால்தான், அவரை எந்த கூட்டத்தில் வைத்துக் கொள்வதே இல்லை.
எனக்கு தெரியும். ஏனென்றால்..!
தமிழக அரசியலில் எப்போதெல்லாம் பெண்களை நோக்கிய விமர்சனம் வைக்கப்படுகிறதோ, அப்போது அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். எங்களுக்குள் குழப்பம், சாதி பிரச்னை என எதுவுமில்லை. 70 ஆண்டுகளாக நீங்கள் தான் அரசியலில் இருக்கிறீர்கள். சாதியை உருவாக்குவது நீங்கள்தான்... இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ எனக்கு தெரியும். ஏனென்றால் நான் அங்கிருந்து வேலை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்.

எம்.ஜி.ஆர-ரும் அப்படித்தான். அங்கிருந்து வேலை செய்து கொண்டிருந்தவர். எப்பொழுது அங்கு தவறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாரோ, அப்போது வெளியே வந்தார். அதுபோல நானும் வெளியே வந்து விட்டேன். அண்ணாவின் குறிக்கோளை எம்ஜிஆர் நிறைவேற்றினார். இன்று வரை அறிவாலயத்தில் பெரியார் புகைப்படமோ, அம்பேத்கர் சிலையோ வைக்கபடவில்லை.
என்ன ஒரு அப்பா இவர்?
வேங்கைவயல் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களே குற்றம் செய்தவர்களாக கட்டமைக்கப்பட்டார்கள். என்ன ஒரு அப்பா இவர்... நாம் காவல்துறையை திட்டிக் கொண்டிருக்கிறோம். தலித் மக்களை தலித்தாக பார்க்காதீர்கள். ஒரு மனிதனாக பாருங்கள். எங்களுக்கு மனிதம்தான் முக்கியம். மனிதத்தை நேசியுங்கள் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. முசோலினி இனவாத அரசியலை கையில் எடுத்தார்.
பாயாசம் அல்ல நாசிசம்!
அதே இனவாத அரசியலை பா.ஜ.க எடுத்து தேர்தல் அரசியலுக்குள் வரும்போது அதற்குதான் பாசிசம் என்று சொல்கிறோம். தி.மு.க-வை பாயாசம் என்று சொல்லக்கூடாது. நாசிசம் என்று சொல்ல வேண்டும். சட்டசபையில் அமைச்சர்கள் பேசுவதை கூட முழுமையாக காட்டுவதில்லை. அவையில் இல்லாத எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து கேட்கிறேன் என அவையில் இல்லாத தலைவரிடம் முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார்.
10 மானிய கோரிக்கைகளை, ஒரே நாளில் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் குரல்வளை சட்டசபையில் நசுக்கப்படுகிறது. அண்ணாவிற்கு பின்னால் கலைஞர் 10 குடும்பங்களின் கட்சியாக மாற்றினார். மூன்றாம் தலைமுறை தலைவர் அதை ஒற்றை குடும்ப கட்சியாக மாற்றி இருக்கிறது. உங்கள் குடும்பத்திற்கு நல்ல அப்பாவாக இருக்கிறீர்கள். ஆனால் தமிழகத்திற்கு நல்ல அப்பாவாக இல்லை. எப்படி ஹிட்லர் முசோலினியை பார்த்து வளர்ந்தாரோ அதுபோல" என்றார்.