'பட்டிமன்றம் பேசுறதுக்கான தகுதி எனக்கு இல்லேன்னு நம்பினேன்' - பட்டிமன்றம் ராஜா |...
Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?
இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும். ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது. மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது. இந்த வகை சொத்துகளை அதை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும்.
அதாவது முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். இந்த இரண்டாவது வகையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் வக்பு சட்டம் 1995 இன் கீழ் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது.
இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக,
மதம் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது எதிர்கட்சிகளின் வாதம்.
`வக்பு சொத்துக்கள் சில தனிநபர்களால் தவறாக கையாளப்படுகின்றது. எனவே அதை சரி செய்வதற்காக தான் இந்த மசோதாவை கொண்டு வருகிறோம்’ என்பது மத்திய அரசின் வாதம்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு
இந்த மசோதா மிகவும் தீவிரமானது என்பதால், இதில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.
`எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்த ஒரு திருத்தத்தையும் ஏற்க கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தயாராக இல்லை. அத்தனை விதிமுறைகளுக்கும் எதிராக அவர் செயல்படுகிறார்’ என தொடர் குற்றச்சாட்டுகளை குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வந்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதா தொடர்பான அறிக்கையை தயார் செய்து அதை நாடாளுமன்றத்திலும் அவர் சமர்ப்பித்து இருந்தார்.

நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா
கூட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.4.2025 அன்று மக்களவையில் இந்த மசோதாவை விவாதத்திற்கு அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. மக்களவையில் மட்டும் 8 மணி நேரம் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நாளைய விவாதத்தின் போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக நாளை பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பாஜக கொறடாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களவை, மாநிலங்களவை - எவ்வளவு தேவை?
ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் அவர்களும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மக்களவையை பொறுத்த வரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றது. அதுவே எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிக்கு 250 இடங்கள் தான் உள்ளது. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மாநிலங்களவையில் தான் மத்திய அரசுக்கு சிறிய அளவில் சவால் காத்திருக்கிறது.
அங்கு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் தேவைக்கும் சில இடங்கள் அதிகமாகவே உள்ளன. 125 உறுப்பினர்கள் அவர்கள் வசம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியிடம் 88 இடங்கள் உள்ளன. இரு கூட்டணியில் இடம் பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 7,8 பேர் அவைக்கு வரவில்லை என்றாலோ அல்லது எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், தேவைப்படும் எண்கள் மிக நெருக்கமாக இருக்கிறது.
அதிமுக நிலைப்பாடு என்ன?
மாநிலங்களவையில் பாமக-வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே வாசன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் அதிமுக-வின் என். சந்திரசேகரன், ஆர். தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேர் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதும் இங்கு அரசியல் ரீதியாக கவனிக்கதக்கது.
தற்போது பாஜக அதிமுக கூட்டணி பேச்சுக்கள் வலுபெற்றிருக்கும் சூழலில் இந்த மசோதாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் நேரடி ஆதரவு தருவார்களா அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு தருவார்களா அல்லது அதிமுக-வின் முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்காக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வியாக எழுந்திருக்கிறது. ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதால், இந்த செயல்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் வக்பு மசோதா விவாதத்திற்கு வரும்போது இந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரிய வந்துவிடும்.!