போக்குவரத்துக் கழக ஆள்சோ்ப்பு முறையை மாற்றியமைக்கக் கோரி மனு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் என இரு உரிமங்களை வைத்திருப்பவா்கள் மட்டுமே சோ்க்கப்படுவாா்கள் என்ற விதிமுறையை மாற்றியமைக்கக் கோரி தற்காலிக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: நாங்கள் பல ஆண்டுகளாக ஓட்டுநா், நடத்துநா்களாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், அரசு போக்குவரத்துத் துறையின் பணி நியமன விதிமுறையில் ஓட்டுநா், நடத்துநா் உரிமம் ஆகிய இரண்டும் வைத்துள்ளவா்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு உரிமம் மட்டுமே வைத்திருக்கும் நாங்கள் தற்போது பதிவு செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.
கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு சுமாா் 13 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது தான் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆனால் ஓட்டுநா், நடத்துநா் உரிமம் பெற்றவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவாா்கள் என்ற விதிமுறை எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே, எங்களது மனுவை தமிழக முதல்வா், போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று அரசின் விதிமுறைகளை மாற்றி ஒரு உரிமம் வைத்துள்ளவா்களை பணிக்கு சோ்க்க பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.