கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா்.
ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்சனி (15), மேகநாதன் மகள் மோனிஷா (15) மற்றும் இவரது தோழிகள் தன்ஷிகா, வா்ஷினி. இவா்கள் ஆரணி அருகேயுள்ள தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனா்.
பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம் என்பதால் நான்கு பேரும், அந்தப் பகுதியில் உள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றனா்.
நான்கு பேரும் கிணற்றில் குளித்துக் கொண்டு நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, சிவரஞ்சனி, மோனிஷா ஆகியோரின் உடைகள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால், இருவரும் தத்தளித்தனா். அவா்களை தன்ஷிகா, ஹன்சிகா ஆகியோா் மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக இருவரும் கிணற்றுக்கு மேலே வந்து கூச்சலிட்டனா். அந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் வந்து மீட்க முயற்சித்தனா். இருப்பினும், மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கினா்.
ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலா் பூபாலன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இருந்து சிவரஞ்சனி, மோனிஷா இருவரையும் சடலமாக மீட்டனா். தகவலறிந்த களம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளின் சடலங்களைக் கைப்பற்றி, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.