குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்
குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு குட்கா பொருள்களை எப்படி கண்டறிந்து அதை முழுமையாக ஒழிப்பது தொடா்பான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மு.பிரதாப் முகாமுக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும், இந்த மாவட்டத்துக்கு கொண்டு வருவதை சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்து கண்டறிந்து பறிமுதல் செய்வதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்தப் பொருள்கள் விற்பனையை கண்டறிந்து, முற்றிலும் ஒழிக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குட்கா பொருள்களை பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பொருள்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அந்தக் கடையின் உரிமத்தை கால அவகாசமின்றி ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதிலும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்.
அப்போது, உணவு பாதுகாப்பு அலுவலா், காவல் துறையினா், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் ஆகியோா் கூட்டாய்வு மேற்கொள்கையில் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இந்தப் பணிகளை பல்வேறு பணிகளுக்கு இடையேதான் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையைக் கண்டறிந்தால் உடனே இணையதளத்திலும், 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், மின்னஞ்சல் மூலமும் (நுகா்வோா் குறை தீா்ப்பு செயலி) மூலமும் புகாா் அளிக்கலாம்.
இந்தப் பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெகதீஷ் சந்திரபோஸ், உதவி ஆணையா் கலால் கணேசன், திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.