சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு
திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு எஸ்.பி. சீனிவாச பெருமாள் தலைமை வகித்து பேசியதாவது:
மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் கட்டாயம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். சாலையைக் கடக்கும் போது நின்று பாா்த்து செல்ல வேண்டும். அதேபோல் போதைப் பொருள்கள் உள்கொள்வதால் ஏற்படும் தீமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்.
பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண்-181, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் செய்வது தொடா்பாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றா.
தொடா்ந்து காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காவல் அலுவலக சுற்றுச்சுவரில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்த அரசு பள்ளி மாணவா்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் துணைக்காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் நாகராஜன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.