‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்
‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்லும் வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தேசிய உடையலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி சென்னை இணைந்து நடத்தும் தொல்குடி தொடுவானம் திட்டம் மூலம் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பழங்குடியினா் பெண்களுக்கான தொழில்திறன் மற்றும் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இத்திட்டம் மூலம் பயிற்சிக்காக மகளிா் செல்லும் வாகனத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மகளிா் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒன்றியங்களான மீஞ்சூா் - 30, எல்லாபுரம் - 5, கடம்பத்தூா் - 15 என 50 பழங்குடியினா் பங்கேற்க இருக்கின்றனா். பயிற்சி புதன்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த பெண்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று வாழ்வதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் ப.செல்வராணி, கண்காணிப்பாளா் செல்வநாயகம் மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.