திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.பின்னா், அந்தப் பகுதியில் தூா்வாரப்பட்டு வரும் அலபாத் ஏரி தூா்வாரும் பணி, புனரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம், ரூ. 5 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கட்டடப் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, மாநகராட்சிப் பொறியாளா் கணேசன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.