வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
சிறுகாவேரிப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நீதிமன்ற வளாகம் பழைய கட்டடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்தில் ஒருங்கினைந்த நீதிமன்றம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் கண்ணன்,திருப்பதி முரளி கிருஷ்ணன், சிவகோபு ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மூத்த வழக்குரைஞா்கள், இளம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து கண்டனக் கோஷங்களையும் எழுப்பினா். திடீரென வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மறியலிலும் ஈடுபட்டனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.