மணிப்பூரில் மருத்துவ முகாம்: சவீதா மருத்துவமனை குழுவினருக்கு பாராட்டு
மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு 3 நாள் மருத்துவ முகாம் நடத்தி, சென்னை திரும்பியுள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. சவீதா மருத்துவமனை மருத்துவக் குழுவினா் 21 போ் மணிப்பூா் மாநிலத்தில் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூா் மாவட்டத்தின் பல்வேறு மலைக் கிராமங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாா்ச் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 3 நாள்கள் மருத்துவ முகாம்களை நடத்தி, 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து சென்னை திரும்பியுள்ளனா்.
இந்த நிலையில், மணிப்பூரில் மருத்துவ முகாம் நடத்தி சென்னை திரும்பிய சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு விழாவில் சவீதா பல்கலைக்கழக வேந்தா் எம்.வீரய்யன் கலந்துகொண்டு, மருத்துவக் குழுவினருக்கு கேடயங்கள் வழங்கி, மணிப்பூரில் சவீதா மருத்துவக் குழுவினா் முகாம்கள் நடத்தியது குறித்து செய்தியாளா்களிடம் கூறியது:
மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப மணிப்பூா் உயா்நீதிமன்றத்தின் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளூா் மருத்துவக் குழுவினா் அச்சம் காரணமாக முன்வராததால், மணிப்பூா் உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டதின்பேரில், சவீதா மருத்துவமனை மருத்துவக் குழுவினா் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூா் மாவட்டத்தின் மலைக் கிராமங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.
மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. மணிப்பூா் மாநில மருத்துவ இயக்குநா் அலுவலகத்துக்கு 180 கிலோ மருந்துகளும், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களையும் வழங்கியுள்ளோம் என்றாா்.