செய்திகள் :

Annamalai: 'அவரை போய் பாருங்க' அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?

post image

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். "பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே..." என ஒரு தரப்பு கிசுகிசுக்க, "ச்சே.. அவரே இந்த பதவி வேண்டாம்னு சொல்லிட்டாராம்..." எனக் காதைக் கடிக்கிறது மற்றொரு தரப்பு. இப்படி, தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படப் போவதாக பரவும் செய்தியால், அனல் வீசுகிறது கமலாலயத்தில்.

என்னதான் நிலவரம்..? விசாரித்தோம்.

டெல்லி பயணங்களும் பரபரப்புகளும்!

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அக்கட்சியின் சீனியர் தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். 'தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகவே அமித் ஷாவைச் சந்தித்தோம்' என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தாலும், கூட்டணி தொடர்பாக பேசவே அ.தி.மு.க தலைவர்கள் சென்றதாக செய்திகள் வெளியாகின. அந்தச் சந்திப்பின்போது, "எங்கள் கட்சித் தலைவர்கள் குறித்து அண்ணாமலை துடுக்குத்தனமாகப் பேசாமல் இருந்திருந்தால், கூட்டணியில் பிளவே உருவாகியிருக்காது..." என அ.தி.மு.க சீனியர்கள் சொல்லவும், "அண்ணாமலை விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்.

அமித்ஷா வுட

அதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றிருக்கிறார் அமித் ஷா. அதைத்தொடர்ந்து, டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலையுடன், அமித் ஷாவும் ஜெ.பி.நட்டாவும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அங்கேதான் பஞ்சாயத்தும் வெடித்ததாகச் சொல்கிறது கமலாலய வட்டாரம்.

அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், "அண்ணாமலையிடம், 'அ.தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. அக்கட்சி குறித்து இனி எதுவும் பேச வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமாதானம் செய்யும் வழியைப் பாருங்கள்' என அமித் ஷா சொல்லவும், 'அ.தி.மு.க-வுன் கூட்டணி அமைப்பதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது' என தடாலடியாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்த பதிலை அமித் ஷாவும் எதிர்பார்த்திருக்கவில்லையாம்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, தொடர்ச்சியாக அ.தி.மு.க வாக்குகள் சரிந்து வருவதாக சில டேட்டாக்களை அமித் ஷாவிடம் அளித்த அண்ணாமலை, 'எடப்பாடி தலைமைக்கு விழும் வாக்குகள் குறைந்துகொண்டே வருகின்றன. அதேசமயத்தில், நம்முடைய வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது. முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினரிடம் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை. அதனால்தான், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் இரண்டாமிடம் பெற்றார். அந்தத் தொகுதியில் இரட்டை இலை டெபாஸிட்டைப் பறிகொடுத்தது. இப்போது, எடப்பாடியுடன் அணி சேர்ந்தால், நமக்கு விழுந்த வாக்குகளை இழக்க நேரிடும். மதுரையில் செளராஸ்டிரா சமூகத்தினரின் வாக்குகள் நமக்குக் கிடைக்காமல் போகலாம். ஆகவே, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை.

அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'வாக்குகள் உயர்வதாக கணக்குப் போட்டுக் காட்டினால் மட்டும்போதுமா.. ரிசல்ட்டில் அது பிரதிபலிக்க வேண்டாமா..? '2024 நாடாளுமன்றத் தேர்தலில், பத்து சீட்டுகள் தமிழகத்தில் வெல்வோம்' என்று சொன்னீர்கள். அதை நம்பித்தான் பல விஷயங்களையும் செய்தோம். ஆனால், ஒரு சீட்டில்கூட வெற்றிப்பெறவில்லை. கோவை தொகுதியிலேயே நீங்கள் தோற்றுப்போய்விட்டீர்கள். இதற்கு மேலும், வலுவான கூட்டணி இல்லாமல், தேர்தல் களத்தைச் சந்திக்க தலைமை தயாராக இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது. இந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதை ஏற்றுக்கொண்டு செயல்பட பாருங்கள்...' எனக் கடுகடுக்கவும், அண்ணாமலை கொதித்துப் போயிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கத்தான் அண்ணாமலை காய் நகர்த்தி வந்தார். அ.தி.மு.க-வுடன் பிரச்னையைக் கிளப்பி, அக்கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதும்கூட ஒருவகையில் வியூகம்தான். ஆனால், 'எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்' என அமித் ஷா சொன்னதும், அதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போயிருக்கிறார். பதட்டத்தில், 'அவரெல்லாம் முதல்வர் வேட்பாளரா..? அவருக்கென எந்த வாக்கு வங்கியும் இல்லை. அவரை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதால், பா.ஜ.க-வுக்குத்தான் நட்டம். தனக்குள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்ளத்தான் நம்மை நாடியிருக்கிறார். அவரை நம்பாதீர்கள்... கடைசி நிமிடத்தில் கழற்றிக் கொண்டு போய்விடுவார். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மோடு அவர் இருக்க மாட்டார்...' என மலை பொரிந்து தள்ளவும், டென்ஷனாகியிருக்கிறார் அமித் ஷா.

'நான் என்ன சொல்கிறேனோ, அதைச் செய்வதுதான் உங்கள் வேலை. செய்ய விரும்பமில்லை என்றால் பதவியைவிட்டு போய்விடுங்கள்...' என அமித் ஷா கடுகடுக்கவும், அந்த பதிலை அண்ணாமலை எதிர்பார்த்திருக்கவில்லை. 'கட்சியின் நலனுக்காகத்தான் பேசினேன். நான் இருப்பது இடைஞ்சலாக இருந்தால், இந்த மாநிலத் தலைவர் பதவியைவிட்டுப் போய்விடுகிறேன்...' எனக் கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அண்ணாமலை. இதே பதிலை, மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டாவிடமும் கூறிவிட்டு வந்திருக்கிறார். அதையொட்டித்தான், 'நான் ஒரு தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் கட்சியில் இருக்கவில்லை' என கோவை விமானநிலையத்தில் வைத்து பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

'அ.தி.மு.க கூட்டணி அமைவதில், அண்ணாமலை ஒரு இடைஞ்சலாக இருக்கக் கூடாது' என்கிற கருத்து டெல்லி பா.ஜ.க தலைமையிடம் நிலவுகிறது. 'கட்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரை நீக்கிவிட்டால் தமிழக பா.ஜ.க அதளபாதாளத்திற்குப் போய்விடும்' என அண்ணாமலைக்கு நெருக்கமான சில பா.ஜ.க புள்ளிகள் டெல்லியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மேலிடம் கேட்கவில்லை. 'அண்ணாமலை என்ன ரிசல்ட் கொடுத்துவிட்டார்..?' என்பதுதான் டெல்லியின் கேள்வியாக இருக்கிறது.

வழக்கமாக, பா.ஜ.க-வில் அதிரடி மாற்றங்கள் எப்போதுமே நிகழும். தெலங்கானாவில், பா.ஜ.க-வுக்கு நான்கு எம்.பி-க்களை வென்றெடுத்துத் தந்தவர் பண்டி சஞ்சய் குமார். அம்மாநிலத்தில், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். அண்ணாமலைக்கும் மேலாக டெல்லியில் செல்வாக்கும் வைத்திருப்பவர். அவரையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, கிஷன் ரெட்டியிடம் அப்பதவியைக் கொடுத்தது டெல்லி. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு, தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்த பண்டி சஞ்சய் குமார், கடந்த வருடம்தான் மத்திய உள்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆக, பா.ஜ.க-வில் எப்போதுமே சர்ப்ரைஸ்கள் நிகழும். அது அண்ணாமலை விவகாரத்திலும் நிகழப் போகிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அடுத்த மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 'மூன்று மாதத்திற்கு தலைவர் பதவிக்கே ஆள் போடமால், ஒரு ஒருங்கிணைப்புக்குழுவை வைத்து கட்சியை வழிநடத்தலாமா...' என்ற ஆலோசனையும் டெல்லியில் நடைபெறுகிறது. எது எப்படியோ, இன்னும் சில நாள்களில் அண்ணாமலை மாற்றப்பட போவது தெளிவாகத் தெரிகிறது. கடைசி முயற்சியாக, கர்நாடகா மடத்தின் வழியில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், டெல்லியிலேயே பெரிய பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருப்பதால், மலையின் பதவிக்கு உத்தரவாதம் இல்லை" என்றனர் விரிவாக.

இந்தச் சூழலில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நெருங்கி பேசியிருக்கிறார்கள். "மாநிலத் தலைவராவதற்கு வாழ்த்துகள்.." என அந்த அ.தி.மு.க சீனியர்கள் சொன்னதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம்.

எது எப்படியோ, இன்னும் ஒருவாரத்தில் அண்ணாமலையின் பதவி குறித்தான பஞ்சாயத்தில் ஒரு விடை கிடைத்துவிடும்.!

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க