தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!
அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ``சீக்ரெட் ஓனர் பிரதமர் மோடிஜி அவர்களே. உங்கள் பெயரைச் சொல்ல எங்களுக்கு பயம் என்று சொல்கிறார்கள். மத்தியத்தில் ஆள்பவர்கள் என்று முன்னரே நேரடியாக சொல்லி விட்டோம். தமிழ்நாடு தமிழர்களைக் கண்டு ஏன் அலர்ஜி?
ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக் கொள்கிறார்கள்; ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் கல்விக்கும் நிதி ஒதுக்குவதில்லை; ஆனால், மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள். பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாப்பது எங்கள் உரிமை; கடமை. திமுக, வாக்குகளுக்காக காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி; கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி. தமிழ்நாடு இதுவரையில் கண்டிராத ஒரு தேர்தலை அடுத்தாண்டு சந்திக்கும். தவெக - திமுக இடையில் மட்டும்தான் போட்டி’’ என்று தெரிவித்தார்.