பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?
Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம் சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும் கொடுக்கலாமா, குழந்தைகளுக்கு பழைய சாதம் கொடுத்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்போது வாட்டிவதைக்கும் வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை அது காக்கும்.
பழைய சாதம் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உள்ளன. பழைய சாதத்தில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் விளைவாக மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் போன்றவை உடலில் அதிகரிக்கும்.
குழந்தைகளுக்குப் பழைய சாதம் கொடுக்கும்போது, அத்துடன் ஃப்ரெஷ்ஷான தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். அதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் பழைய சாதம் உள்ளது. காலை உணவை சாப்பிட மறுக்கும் பட்சத்தில் உங்கள் மகளுக்கு தயிர் சேர்த்த பழைய சாதம் கொடுப்பது நல்ல சாய்ஸ்.

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போது, எந்த உணவு எடுத்தாலும் அது பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பழைய சாதத்துடன் தயிர் மட்டுமன்றி, காய்கறிகளையும் சேர்த்துக் கொடுத்தால் அது முழுமையான உணவாக இருக்கும். மற்றபடி பழைய சாதம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
