`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?
இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின் அதிக விலையுள்ள மாம்பழமாக பார்க்கப்படும் அவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போஷி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுமன்பாய் கெய்க்வாட். இவரது மகன் நந்த்கிஷோர் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

அப்போது மியாசாகி மாம்பழம் குறித்து நந்த்கிஷோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாங்கன்றை விலைக்கு வாங்க ஆன்லைனில் தேடினார். அக்கன்றுகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவை இந்திய சூழ்நிலைக்கு வளருமா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இதில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிராவின் பர்பானி போன்ற இடங்களில் சிறப்பாக வளர்வதை தெரிந்து கொண்டார்.
இதையடுத்து ஒரு மரக்கன்று ரூ.6500 வீதம் 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்தார். அவற்றை தனது தாயாரிடம் கொடுத்து அவர்களது தோட்டத்தில் நடவு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவை தோட்டத்தில் நடப்பட்டது.
இரண்டு ஆண்டில் மாமரம் பழங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மாம்பழங்களை என்ன விலைக்கு விற்பனை செய்யலாம் என்பது குறித்து பர்பானியில் இதே மாம்பழங்களை விளைவிக்கும் வர்த்தகரிடம் நந்த்கிஷோர் ஆலோசனை நடத்தி தங்களது தோட்டத்தில் விளையும் மாம்பழத்திற்கான விலையை நிர்ணயம் செய்தார்.
அந்த மாம்பழங்களை தலா ரூ.10000-க்கு இப்போது சுமன்பாய் விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் நாண்டெட்டில் நடந்த விவசாய கண்காட்சியில் இந்த மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஒரு பழம் ரூ.10000-க்கு விற்பனையானது.
இதையடுத்து இப்பகுதியில் மேலும் சில விவசாயிகள் மியாசாகி மாம்பழத்தை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மியாசாகி மாம்பழம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. அதோடு வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகளை கொண்டது. குறைவான சர்க்கரை அளவு கொண்ட இந்த மாம்பழம் கண்பார்வை, ஜீரணம், தோல் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் இந்த மாம்பழத்திற்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
