கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்
செப்டம்பர், 2021.
"சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது.
ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு, இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதுக்குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதப்பட்டது.
அடுத்ததாக, இதுக்குறித்து பேச டெல்லிக்கு செல்ல உள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைத்த முதல் 15 ஆண்டுகளுக்கு தான் சுங்கச்சாவடியில் முழுக்கட்டணத்தை வசூலிக்க முடியும். ஆனால், அதன் பிறகு, அந்தக் கட்டணத்தில் 40 சதவிகிதத் தொகையைத் தான் பராமரிப்பு தொகையாக வசூலிக்க வேண்டும்.
ஆனால், இதை மீறி, தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் முழுத்தொகை சுங்கச்சாவடிகளின் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தையும் தாண்டி, தமிழ்நாட்டில் கிட்டதட்ட 32 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளது. அந்த சுங்கச்சாவடிகளை மத்திய அரசு சீக்கிரம் திரும்ப பெற வேண்டும்".

மூன்று ஆண்டுகள் கழித்து...
செப்டம்பர், 2024.
"தமிழ்நாட்டில் பரனூர், கிருஷ்ணகிரி, ஶ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் காலம் முடிந்துவிட்டது. இவற்றை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்த சுங்கச்சாவடிகளை திரும்பப்பெறுங்கள். இல்லையென்றால், அங்கே குறைந்தக் கட்டணத்தை வசூலியுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
காலாவதியான சுங்கச்சாவடிகளையும், குறிப்பிட்ட இடைவெளியில் இல்லாமல் இருக்கும் சுங்கச்சாவடிகளையும் நீங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், இன்னும் செய்யவில்லை.
இதை தொடர்ந்து வலியுறுத்துவதை தவிர, வேறு என்ன நாங்கள் செய்ய முடியும்? இதுக்குறித்து சட்டமன்றத்தில் பேசுகிறோம். நேரிலும் சென்று கடிதம் கொடுத்தும் இருக்கிறோம்".
மேலே குறிப்பிட்ட இரண்டுமே தமிழ்நாட்டு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படும். நாளை முதல் (ஏப்ரல் 1) தமிழ்நாட்டில் உள்ள வானகரம், பரனூர், திண்டிவனம், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை மொத்தம் 78. மீதம் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்படும்.
இந்தக் கட்டண உயர்வு ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கலாம்.
ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க நமக்கு உதவுவது சாலை. இந்த சாலைகளை அமைக்கவும், பரமாரிக்கவும் தான் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு சாலையை அமைக்க குறிப்பிட்ட தொகை ஆகிறது என்றால், அதற்கான தொகையை சாலை போட்ட ஒப்பந்த நிறுவனம் குறிப்பிட்ட காலம் வரை சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணமாக வசூலித்துகொள்ளலாம்.
மேலும், அந்த சாலையில் செய்யப்படும் பரமாரிப்பு பணிகளுக்கும் இந்தக் கட்டணம் பயன்படுத்தப்படும். மேற்சொன்ன குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, சுங்கச்சாவடி கலைக்கப்பட்டு, அது கட்டணமில்லா சாலையாக மாறிவிடும்.
ஆனால், கட்டணமில்லா சாலையாக மாற வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள 32 சாலைகளில் சுங்கச்சாவடிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளது... கட்டணங்களை வசூலித்து வருகிறது.
இப்போது கொண்டுவந்துள்ள கட்டண உயர்வில் இந்த சுங்கச்சாவடிகளுமே அடங்கும்.
இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளதாவது...
தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது.
விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களை மேலும் பாதிக்கும் வகையில் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
2008-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறி வரும் போதிலும், சுங்கக்கட்டணத்தை உயர்த்த எந்தவிதமான நியாயமும் இல்லை.
எந்த ஒரு கட்டமைப்பின் பயன்பாட்டுக்கான கட்டணமும் அதன் வரவு, செலவு மற்றும் லாப, நட்டக் கணக்குகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல.
தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முதலீட்டுக்கான வட்டி, பரமாரிப்பு செலவுகள் போன்றவற்றை அதிகரித்துக் காட்டியும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டியும் மோசடிகள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப் படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும்; அதற்கு முன்பாகவே சுங்கக்கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன?
40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 24, 2025
கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்!#StopTollHikepic.twitter.com/GJcuQsGUGt
கடந்த காலங்களில் இல்லாத வகையில் 2023-24ஆம் ஆண்டில் சுங்கக்கட்டண வசூல் 35% உயர்ந்து ரூ.64 ஆயிரத்து 810 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2019-20ஆம் ஆண்டில் ரூ.27,503 கோடியாக இருந்த சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135% அதிகரித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதியாகும். எனவே, புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
'சில சுங்கச்சாவடிகள் கலெக்சன் ஏஜெண்டுகளின் கைகளில் உள்ளது' என்று சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறுகிறார்...
முதலில் சாலை அமைக்கப்படும். அதற்கு பயன்படுத்திய தொகையும், அடுத்து அதை பராமரிக்கும் தொகையும் பணவீக்கத்திற்கு ஏற்ப சுங்கச்சாவடி மூலம் வசூலிக்கப்படும்.
பின்னர், கால அவகாசம் முடிந்தப் பின்னர் சுங்கச்சாவடி மூடப்படும். அந்த சாலை அரசுக்கே கொடுக்கப்பட்டுவிடும். இது தான் சுங்கச்சாவடியின் நடைமுறை.
முதல் சொன்ன இரண்டு நடைமுறைகள் முடிந்து சாலையை அரசிடம் ஒப்படைக்கும் நிலையில் கிட்டதட்ட 32 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளது. இது தமிழ்நாடு அரசு கொடுத்த தகவல் தான்.

இந்த சுங்கச்சாவடிகளை திரும்ப பெற கூறி தமிழ்நாடு பொதுபணித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை.
சில சுங்கச்சாவடிகளில் ஒப்பந்தாரர்களே இல்லை. ஒப்பந்தாரர்கள் தான் சாலை பராமரிப்பு பணிகளை பார்த்துகொள்வார்கள். ஆனால், அவர்கள் இல்லாமல், கலெக்சன் ஏஜென்டுகள் மட்டும் இருக்கும் சுங்கச்சாவடிகள் பல இருக்கின்றன.
இவர்கள் பணத்தை மட்டும் வசூலித்து கொள்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட அந்த சாலையில் பராமரிப்பு பணி எதுவும் நடப்பதில்லை.
இப்படியிருக்கையில், தற்போதைய சுங்கச்சாவடி கட்டண 5 சதவிகித உயர்வு கலெக்சன் ஏஜென்டுகளின் கைகளுக்கு செல்கின்றன. இவர்களுக்கு ஏன் அந்தக் கட்டண உயர்வு என்பது தான் பெரிய கேள்வி.
இதற்கு மதுரவாயல் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் சிறந்த உதாரணம்.
இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வினால் தற்போது கூடுதலாக ரூ.75 முதல் ரூ.100 வரை கட்டணம் உயரும்.
ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுபடும். 10 சக்கர வாகனங்கள் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ரூ.240 தர வேண்டும். சூரப்பெட்டில் ரூ.380, விக்கிரவண்டியில் கிட்டதட்ட ரூ.800.
திருச்சியில் இருந்து சென்னை வர 8 - 10 சுங்கச்சாவடிகள் தாண்டிவர வேண்டியதாக இருக்கும். அந்த அத்தனை சாவடிகளிலும் ரூ.5 - ரூ.75 கட்டணம் உயர்ந்தால் பயண செலவு மிக அதிகமாகும்.
இந்தக் கட்டண உயர்வை நாங்கள் எங்கள் வாடகையில் தான் ஏற்றுவோம். அப்போது பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
ஒப்பந்தம் அடிப்படையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் இந்தக் கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் நடக்கும் விபத்துகளில் 52 சதவிகித விபத்துகள் சுங்கச்சாவடிகள் உள்ள சாலையில் தான் நடக்கின்றன. சுங்கச்சாவடி இருக்கிறது என்றால் அங்கே பராமரிப்பு பணிகள் நடக்க வேண்டும். அப்படி பரமாரிப்பு நடக்கும் சாலையில் இவ்வளவு விபத்துகள் நடப்பது எப்படி சரியாக இருக்கும்.
இதை சரிசெய்ய மாநில அரசு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்லது நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இந்தப் பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
நிதின் கட்கரி வெளிநாட்டு சாலை வசதிகளை இங்கு கொண்டுவருவதாக கூறுகிறார். ஆனால், வெளிநாட்டில் உள்ள டோல் டிஜிட்டல் போர்ட் இங்கு இல்லை. இந்தப் போர்டு மூலம் எத்தனை ரூபாய் அந்தச் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, அப்படி எந்த டிஜிட்டல் போர்டும் இல்லை. அதனால், அந்த சுங்கச்சாவடியை தாண்டி வந்தப் பிறகு தான் எத்தனை ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
இதிலும் வெளிப்படை தன்மை வேண்டும்".
'ஆண்டுக்கு கிட்டதட்ட ரூ.13 லட்சம் கட்டுகிறோம்' என்று சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து விவரிக்கிறார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன்.
திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்து உதாரணத்தை எடுத்துகொள்வோம். இந்த சாலையில் வானகரம், பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை, சமயபுரம் என ஏழு சுங்கச்சாவடிகள் உள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் முறையே ரூ.180, ரூ.205, ரூ.190, ரூ.355, ரூ.225, ரூ.250, ரூ.230 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தின் மொத்தத் தொகை ரூ.1,635.
இதுப்போக இந்த வழியாக காரைக்குடி, தஞ்சாவூர், மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன.

இந்தப் பேருந்துகளின் ஒரு நாள் எண்ணிக்கை 1,000. போய் வரும்போது 2,000 பேருந்துகள் என கணக்காகிறது. திருவிழா, விடுமுறை போன்ற காலங்களில் 2,000-ல் இருந்து 2,500 பேருந்துகள் வரை செல்கின்றன.
ஒரு பேருந்திற்கு போய் வர சுங்கச்சாவடி கட்டணம் ரூ.2,000 என்று வைத்துக்கொள்வோம். சாதாரண நாள்களில் இந்தப் பேருந்துகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.40 லட்சம்.
ஆண்டிற்கு ஒரு பேருந்து கட்டும் சுங்கச்சாவடி கட்டணம் சுமார் ரூ.7 லட்சம் - 12 லட்சம்.
இன்னொரு பக்கம், மோட்டர் வாகன சட்டத்தின் படி, ஒரு வாகனத்திற்கு ஒரு சாலை வரி தான் கட்ட வேண்டும். ஒரு சாதாரண ஆம்னி பேருந்துக்கு ஒரு ஆண்டிற்கு சாலை வரியாக ரூ.6 லட்சம் கட்டப்படுகிறது.
ஆக, இரண்டு வரிகளையும் கட்ட வேண்டியதாக இருக்கிறது. அதுவும் கிட்டதட்ட ரூ.13 லட்சம்.
இந்தக் கட்டண உயர்வு பயணிகளின் பயண சீட்டு கட்டணத்தில் தான் எதிரொலிக்கும்.
இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள், சாலை எப்படி இருக்கிறது என்று பார்த்தால், சாலைகள் குண்டும், குழியுமாக பயணத்திற்கு ஏற்றதாக இல்லை.
மேலும், இடைநிற்றல், கழிவறை போன்ற வசதிகளும் இந்த சாலைகளில் இல்லை.
வானகர சாலையில் ஒரு வளைவு உள்ளது. அந்த வளைவில் ஒரு மாதத்திற்கு குறைந்தது 6 விபத்துகள் நடக்கின்றன. ஆனால், இதை சரிசெய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஆண்டுதோறும் கட்டணம் மட்டும் உயர்த்தப்படுகிறது.
இதனால், சுங்கச்சாவடிகளை பார்த்தாலே இயற்கையாக கோபம் வருகின்றது.

கட்டணத்தை தாண்டி சுங்கச்சாவடிகளில் வேறு சில பிரச்னைகளும் உள்ளது...
10 மணி நேரத்தில் போக வேண்டிய ஒரு ஊருக்கு, சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியிருப்பதால் தாமதமாக தான் பேருந்து சென்று சேர்கிறது.
முன்பு போல் அல்லாமல், சுங்கச்சாவடிகளில் FASTag போன்ற தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளாலும் சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக உள்ளது.
சில சுங்கச்சாவடிகள் தண்ணீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.
இதுப்போன்ற சுங்கச்சாவடிகள் பிரச்னைகளுக்கு தீர்வு கூறுகிறார் வழக்கறிஞர் மற்றும் பொதுநல ஆர்வலர் பாபு ரங்கசாமி.
'10 விநாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் சுங்கச்சாவடியில் காத்திருந்தால், அந்த வாகனத்திடம் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்ற சட்டம் முன்பு இருந்தது. ஆனால், அது திரும்பப்பெற விட்டது. இதற்கு காரணம், சுங்கச்சாவடிகளில் ஆகும் தாமதம் தான்.
இந்தத் தாமதங்களுக்கு பல காரணங்கள் உண்டு - வி.ஐ.பி வாகனம் என்று கூறி சுங்கச்சாவடி கட்டணத்தை கட்டமாட்டோம் என்று கூறுவது, ஃபாஸ்ட் டேக் இருப்புத்தொகை முடிந்துவிட்டது என்று சுங்கச்சாவடியில் கவனித்து, அங்கே ரீசார்ஜ் செய்வது போன்ற காரணங்களால் தாமதங்கள் ஏற்படுகின்றது.
இதை தவிர்க்க, வெளிநாடுகள் மாதிரி சுங்கச்சாவடி கட்டணங்களை வசூலிக்க ஜி.பி.எஸ் வசதியை கொண்டுவர வேண்டும். வாகனத்தை தயாரிக்கும்போதே, இதற்கான ஏற்பாட்டை செய்துவிட வேண்டும். அப்போது சுங்கச்சாவடியை கடக்கும்போது, தானாக பணம் எடுக்கப்பட்டுவிடும். தேவையில்லாத காத்திருப்பு இருக்காது.

ஃபாஸ்ட் டாக் இருப்புத் தொகை குறையும்போது உபயோகிப்பாளரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு வங்கியில் இருந்து ஃபாஸ்ட் டாக் தானாகவே ரீசார்ஜ் செய்வதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும். வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் மற்றும் பயணிகள் சௌகரியத்தை கருத்தில் கொள்ளும்போது, அவர்களுக்கான கழிவறை, தண்ணீர் போன்ற அடிப்படை வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக பேணப்பட வேண்டும்.
சில நேரங்களில், 'கழிவறை எங்கு இருக்கிறது?' என்பதை தேடவே சிரமமாகிவிடுகின்றது. அதற்கான வழிகாட்டுதல் பலகைகள் வைக்க வேண்டும்.
சுங்கச்சாவடி இருக்கும் சாலையில் எதாவது விபத்துகள் ஏற்பட்டால், டோ வாகனம் போன்ற ரெக்கவரி வாகனத்தை சுங்கச்சாவடி ஒப்பந்தாரர்கள் தான் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஆனால், அவர்கள் அப்படி செய்வதில்லை. இதனால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
சுங்கச்சாவடி சாலைகளில் மக்களும் 80 - 100 கி.மீ-கள் வேகத்திற்குள் ஓட்ட வேண்டும்.
சுங்கச்சாவடிகள் உள்ள சாலைகளில் அடிக்கடி பாலம் கட்டும் பணி செய்துவருகின்றனர். இதனால், தாமதம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மாற்றப்பட்ட குறுகிய சாலைகளில் ஓட்டுநர்கள் வேகத்தை காட்டுகின்றனர். இதை ஓட்டுநர்கள் தவிர்க்க வேண்டும்.
பாலம் கட்டும் சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் குறைவாக வசூலிக்கலாம். சுங்கச்சாவடி கட்டணம் என்பது மக்களின் வசதிக்காகத் தான். ஆனால், பாலம் கட்டுவது போன்ற பணிகளால் மக்களின் வசதி பாதிக்கப்படும்போது, குறைவான கட்டணத்தை வசூலிக்கலாம்.

அப்படி வசூலிக்கவில்லை என்றால் அங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை அவர்கள் தான் நெறிமுறைப்படுத்த வேண்டும்".
2022-ம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'காலாவதியான சுங்கச்சாவடிகள் சீக்கிரம் மூடப்படும்' என்று கூறியிருந்தார்.
'சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்' என்று தமிழக அமைச்சர் எ வ வேலு கடிதம் எழுதி கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 'சுங்கச்சாவடிகள் மூடப்படும்' என்றுக்கூறி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லவே இல்லை.
'இதுக்குறித்து தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் பலமாக வலியுறுத்தவில்லை?', 'சொன்னதை செய்வதில் மத்திய அமைச்சருக்கு என்ன பிரச்னை?', 'இந்த இரு அரசுகளுக்கும் மக்களின் மீது அக்கறை இல்லையா?', 'இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்கள் இப்படி அதிக கட்டணங்களை செலுத்த வேண்டும்?', 'அப்படி செலுத்தியும் பரமாரிப்பில்லாத சாலைகளில் ஏன் அவர்கள் வாகனங்களை இயக்க வேண்டும்?' என்ற ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கான பதிலை சொல்ல வேண்டியது மத்திய அரசும், மாநில அரசும் தான்.