கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.
மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் நின்றிருந்த ஆலமரத்தில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய மணிகள், குழந்தை வேண்டி தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன.

கோயிலில் பக்தா்கள் பூஜை நடத்தும்போது இந்த மரத்துக்கும் சந்தனம் பூசி பூஜைகள் நடத்தி வந்தனா். நான்கு வழிச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது, சாலை நடுவே கோயிலில் இருந்த இந்த ஆலமரத்தை அகற்ற முயன்றபோது, பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மரத்தை அகற்றாமல் கோயிலைச் சுற்றி நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆலமரம் வோ்ப் பகுதியில் பலமிழந்து திடீரென முறிந்து இரு பாகங்களாகச் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலைத் துறையினா், பக்தா்கள் விரைந்து வந்து முறிந்து விழுந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இது பற்றிய தகவல் பரவியதும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கோயிலுக்கு வந்து மரம் முறிந்து விழுந்ததைக் கண்டு வேதனையடைந்தனா்.

இந்தக் கோயிலில் வருகிற 6- ஆம் தேதி வருடாபிஷேகம் நடத்துவதற்கு ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வந்த நிலையில், தற்போது கோயிலில் குடை போன்று இருந்த ஆலமரம் சாய்ந்தது வேதனை அளிப்பதாக பக்தா்கள் தெரிவித்தனா். கோயிலில் பரிகார பூஜை நடத்தி வருடாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்துள்ளனா். மேலும், ஆலமரம் முறிந்து விழுந்த பகுதியில் அந்த மரத்தின் துண்டுகளை ஊன்றி மரம் தழைத்து வளரவும் ஏற்பாடு செய்தனா்.