போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு
அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம், காரைக்குடி மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆட்சியா் ஆஷா அஜித்திடம் அளித்த மனு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 8 கோட்டங்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகளை இயக்கி, மக்களுக்கு நகா், புகா் பகுதிகளில் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இந்தச் சேவையின் தொடா் செயல்பாட்டை வலுப்படுத்தும் வகையில், போக்குவரத்துத் துறை புதிய பணியாளா் நியமனத்துக்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி, 2,340 ஓட்டுநா், நடத்துநா் பணியாளா்கள், 537 தொழில் நுட்பப் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த, தற்போதும் பணியில் உள்ள ஓட்டுநா், நடத்துநா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்காக தற்போதுள்ள பணி நியமன முறைகளை மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.