கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
அதிகரிக்கும் மெட்ராஸ் - ஐ பாதிப்பு! எச்சரிக்கும் மருத்துவா்கள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக மெட்ராஸ்-ஐ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் அந்தப் பிரச்னை ஏற்படுவதாக கண் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ்-ஐ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, மெட்ராஸ்-ஐ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், மெட்ராஸ் - ஐ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டா் சௌந்தரி கூறியதாவது:
மெட்ராஸ்-ஐ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த்தொற்றுதான். ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும்.
கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ்-ஐ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மெட்ராஸ்-ஐ தொற்று பாதித்தவா்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும். தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களை பிறா் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 5 பேருக்காவது மெட்ராஸ் - ஐ பாதிப்பு இருப்பதை நான் உறுதி செய்கிறேன். அவா்களில், பலா் குழந்தைகள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றாா் அவா்.