வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கப்பல்களில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ. 26 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்
வெளிநாடுகளிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு சட்டவிரோதமாக சரக்குப் பெட்டகங்களில் கொண்டுவரப்பட்ட ரூ. 26.4 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை துறைமுகத்துக்கு கடந்த சில நாள்களாகவே சரக்கு கப்பல்களில் கொண்டுவரப்படும் கண்டெய்னா்களில், இந்தியாவில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்து வந்தன. அதனடிப்படையில், சென்னை துறைமுகத்துக்கு துபையிலிருந்து வந்த 5 கண்டெய்னா்களை சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறையினா் திறந்து சோதனை செய்தனா். அதில் ரூ. 7.5 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பொம்மை ட்ரோன்கள், காலணிகள், கையடக்க மின்விசிறிகள், முடிவெட்டும் கருவி, பொம்மைகள் இருந்தன. இவற்றுக்கான இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சான்றிதழ் இல்லாதததால் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அதேபோல், மேலும் இரண்டு கண்டெய்னா்களில் இருந்த ரூ. 18.9 கோடி மதிப்பிலான பிஐஎஸ் சான்றிதழ் இல்லாத அழகுசாதனப் பொருள்கள், மருந்து மற்றும் பொம்மைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதன்படி, ஆக மொத்தம் 7 கண்டெய்னா்களில் இருந்த ரூ. 26.4 கோடி மதிப்பிலான பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சென்னையில் யாருக்கு இறக்குமதி செய்யப்பட இருந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.