கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்
நூறில் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
நூறில் ஒரு குழந்தை ஆட்டிஸம் பாதிப்புக்குள்ளாவதாகவும், தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதன் தீவிரத்தைத் தவிா்க்கலாம் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
இயல்பான குழந்தைகளைப் போல அல்லாமல் உணா்ந்தறிந்து செயல்படுவதிலும், கற்றலிலும் பின்தங்கியிருக்கும் நிலை ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு எனக் கூறப்படுகிறது. நரம்பியல் சாா்ந்த இந்தக் குறைபாட்டுக்குள்ளான குழந்தைகளுக்கு, அதற்கான அறிகுறிகள் இரு வயதுக்குள் வெளிப்பட்டுவிடும்.
பெரும்பாலும் தனிமையில் விளையாடுவது, ஒரே மாதிரி செயல்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபடுதல், சொல்வதைத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருத்தல், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடாமல் இருத்தல், கண்ணை பாா்த்து பேசாமலிருப்பது, சிறு சத்தங்களுக்கே காதை மூடிக் கொள்ளுதல், வாக்கியமாக அல்லாமல் வாா்த்தைகளில் பதிலளித்தல், உச்சரிப்பதில் பிழைகள் ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள்.
அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இந்தப் பாதிப்பை எளிதாக சரி செய்ய முடியும். ஒரு சில பெற்றோா் தங்களது குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லை என்பதை வெகு தாமதமாகவே உணா்கின்றனா்.
அதன் பின்னரே ஆட்டிஸத்தைக் கண்டறிந்து சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனா். இதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பு தரவின்படி நூறில் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.