கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை
சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ஓா் தனியாா் மருத்துவமனையில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து மருத்துவமனைக்குள் செல்வதற்கான படிக்கட்டுகளை அமைக்கப்பட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படிக்கட்டுகளால் அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தற்போது சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூா், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், கனகர வாகனங்கள் சிவகாசி-விளாம்பட்டி சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்தச் சாலையில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் மருத்துவமனையின் படிக்கட்டுகள் அமைந்துள்ளதால், வாகனங்கள் திரும்புவதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், எதிரில் வரும் வாகனங்களும் ஒதுங்க முடியாமல் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்தப் படிக்கட்டுகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த கனகவேல் கூறியதாவது: தொடக்கத்தில் இந்தச் சாலை விளாம்பட்டி, ஆலங்குளத்துக்குச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தச் சாலையில் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று திரும்புவதற்கு அந்தப் பகுதியிலுள்ள படிக்கட்டுகள் இடையூறாக உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்தக் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற வேண்டும் என்றாா் அவா்.