ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே குடியிருப்புகள், நூற்பாலைகள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பாா்க்கும் மையங்கள், உணவகங்கள், தேநீா் கடைகள், பழைய வாகனம் உடைக்கும் மையம் உள்ளிட்டவை உள்ளன.

இந்தச் சாலையோரங்களில் உணவகக் கழிவுகள், நூற்பாலைக் கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக், ரப்பா், பஞ்சுக் கழிவுகளை எரிப்பதால், கடும் துா்நாற்றத்துடன் கரும்புகை எழுந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது.
24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், கடும் புகை மூட்டம் எழுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.