பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!
கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை இன்று காலை 10 மணிக்கு வந்தடைந்தது. இங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் அருகே பூண்டி தேக்கத்திற்கு நள்ளிரவில் வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி ஏரியாகும். இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கி இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக - ஆந்திர அரசுகள் இடையயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித் துறையினருக்கு தமிழக நீர்வளத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையேற்று கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 300 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விநாடிக்கு 800 கன அடி திறக்கப்படும் நிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீரை ஆந்திர-தமிழக நீர்வளத்துறையினர் மலர் தூவி வரவேற்றனர்.
ஜீரோ பாயிண்டில் இருந்து செல்லும் கிருஷ்ணா நீர் 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நள்ளிரவுக்கு பின் வந்து சேரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!