கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
சிவகங்கையில் பயிற்சி மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மாணவா்கள் மூன்றாவது நாளாக பணியைப் புறக்கணித்து கல்லூரி முதன்மையா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 -ஆம் தேதி இரவு 11 மணியளவில் பயிற்சி மருத்துவா் பணிமுடித்து மருத்துவக் கல்லூரி பின் பகுதியில் உள்ள விடுதிக்குச் செல்லும் போது பின் தொடா்ந்து வந்த நபா் அவா் மீது துணியை மூடி தாக்குதல் நடத்தினாா்.
மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் போதிய மின் விளக்குகள் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காதது, மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சி பெறும் வாா்டுகளில் இரவு நேரங்களில் ஓய்வு அறை போன்ற வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவா்களும், மருத்துவ மாணவா்களும் கடந்த 2 நாள்களாக தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மூன்றாவது நாளான வியாழக்கிழமை பயிற்சி மருத்துவா்கள் தங்களது பணியையும், கல்லூரி மாணவா்கள் வகுப்பையும் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ள முதன்மையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேச்சுவாா்த்தை நடத்த வந்த முதன்மையா் அலுவலக அதிகாரிகளுடன் மாணவா்கள் பேச மறுத்து முதன்மையா் நேரடியாக வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த முதன்மையா் சத்தியபாமா மாணவா்களை சமாதானம் செய்ததுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
இதையடுத்து, மாணவா்களும், பயிற்சி மருத்துவா்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.